பெங்களூருவை காலி செய்துவிட்டு சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்ற மக்கள்


பெங்களூருவை காலி செய்துவிட்டு சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்ற மக்கள்
x
தினத்தந்தி 28 April 2021 2:42 AM IST (Updated: 28 April 2021 2:42 AM IST)
t-max-icont-min-icon

14 நாட்கள் முழு ஊரடங்கு எதிரொலியாக பெங்களூருவை காலி செய்து விட்டு மக்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் பஸ், ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

பெங்களூரு: 14 நாட்கள் முழு ஊரடங்கு எதிரொலியாக பெங்களூருவை காலி செய்து விட்டு மக்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் பஸ், ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

முழு ஊரடங்கு

கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை தொடங்கியுள்ளது. இதனால் மாநிலத்தில் தினமும் பாதிப்பும், உயிரிழப்பும் புதிய உச்சத்தை தொடுகிறது. ஒரு நாள் பாதிப்பு 30 ஆயிரத்தையும் தாண்டியது. கொரோனாவை கட்டுப்படுத்த அரசும், சுகாதாரத்துறையும் எவ்வளவோ நடவடிக்கைகள் எடுத்தால் வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.இதனால் மாநிலத்தில்  ஏப்ரல் 27-ந் தேதி (அதாவது நேற்று) முதல் வருகிற மே 11-ந் தேதி வரை 14 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

மெஜஸ்டிக்கில் குவிந்த பயணிகள்

இந்த நிலையில் 14 நாட்கள் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்பதால் பெங்களூருவில் தங்கி வேலை பார்க்கும் வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலத்தினர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று காலை முதலே மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக ஏராளமான பயணிகள் குவிந்தனர். 

பயணிகள் வசதிக்காக கூடுதல் அரசு பஸ்களும் இயக்கப்பட்டன. பெங்களூரு கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ் நிலையத்தில் இருந்து சிக்கமகளூரு, சிவமொக்கா, குடகு, தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. இதுபோல மெஜஸ்டிக்கில் உள்ள இன்னொரு கே.எஸ்.ஆர்.டி.சி பஸ் நிலையத்தில் இருந்து பெலகாவி, பல்லாரி, பாகல்கோட்டை, ராய்ச்சூர், கதக், யாதகிரி, விஜயாப்புரா, உப்பள்ளி-தார்வார் உள்ளிட்ட வடகர்நாடக பகுதிகளுக்கு பஸ்கள் இயங்கின. மற்றொரு கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ் நிலையத்தில் இருந்து ஆந்திரா மாநிலத்திற்கு பஸ்கள் இயக்கப்பட்டன.

போக்குவரத்து நெரிசல்

இந்த அனைத்து பஸ்களிலும் பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக முண்டியடித்து கொண்டு ஏறி சென்றனர். பஸ்களில் ஏறிய பின்னர் பெரும்பாலான பயணிகள் முகக்கவசத்தை கழற்றினர். ஆனால் டிரைவர், கண்டக்டர்கள் முகக்கவசம் அணிந்தால் தான் பஸ்களை இயக்குவோம் என்று கண்டிப்புடன் கூறி விட்டனர். இதனால் அனைத்து பயணிகளும் முகக்கவசம் அணிந்து பயணம் செய்தனர்.

மேலும் முடிந்த வரை பஸ்களில் பயணிகளை கண்டக்டர்கள் சமூக இடைவெளி விட்டு அமர வைத்தனர். பெங்களூருவில் பல்வேறு பகுதிகளில் தங்கி இருப்பவர்கள் தாங்கள் தங்கியுள்ள பகுதிகளில் இருந்து பி.எம்.டி.சி. பஸ்கள் மூலம் மெஜஸ்டிக்கிற்கு வந்தனர். இதனால் பி.எம்.டி.சி. பஸ் நிலையமும் நேற்று பரபரப்பாக இயங்கியது. மேலும் ஆட்டோக்கள், வாடகை கார்கள் மூலமும் மெஜஸ்டிக்கிற்கு சொந்த ஊருக்கு செல்வதற்காக பயணிகள் வந்து குவிந்தனர். மெஜஸ்டிக்கில் இருந்து பஸ்கள் அதிகமாக இயக்கப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் உண்டானது. இந்த போக்குவரத்து நெரிசலை போலீசார் சரி செய்தனர்.

அணிவகுத்து நின்ற வாகனங்கள்

இதுபோல பெங்களூரு சாட்டிலைட் பஸ் நிலையத்தில் இருந்து மைசூரு, மண்டியா, ராமநகர், கொள்ளேகால், குண்டலுபேட்டை ஆகிய பகுதிகளுக்கு இயங்கிய பஸ்களில் பயணிகள் ஏறி சென்றனர். இதுபோல சேலம், திருவண்ணாமலை, வேலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், திட்டக்குடி, பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் தமிழக அரசு பஸ்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

சாந்திநகர் பஸ் நிலையத்தில் இருந்து திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், ஊட்டி, மதுரை, திண்டுக்கல், திருச்சி ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்களில் கேரள மாநிலத்திற்கு இயக்கப்படும் பஸ்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. பெங்களூருவில் இருந்து வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களான தமிழகம், கேரளா, ஆந்திராவுக்கு இயக்கப்பட்ட பஸ்களால் பெங்களூருவில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. இதேபோல, சொந்த வாகனங்களிலும் ஏராளமான மக்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். 

ரெயில் நிலையங்களிலும்...

இதேபோல பெங்களூரு சிட்டி, யஷ்வந்தபுரம் உள்ளிட்ட ரெயில் நிலையத்திலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. பெங்களூருவில் இருந்து வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு செல்வதற்காக ஏராளமான மக்கள் மூட்டை, முடிச்சுகளுடன் வந்திருந்தனர்.

Next Story