நெல்லையில் அடுக்குமாடி குடியிருப்பில் 25 பேருக்கு கொரோனா- கலெக்டர் அலுவலக ஊழியர்களும் பாதிப்பு
நெல்லையில் ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் 3 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை, ஏப்:
நெல்லையில் ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் 25 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலக ஊழியர்கள் 3 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
25 பேர் பாதிப்பு
நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவல் மீண்டும் தீவிரம் அடைந்து உள்ளது. இதில் நெல்லை மாநகர பகுதி மற்றும் பாளையங்கோட்டை விரிவாக்க பகுதிகளில் 500-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் அடுக்குமாடி குடியிருப்புகளிலும் கூட்டம் கூட்டமாக கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.
நெல்லை சந்திப்பு மதுரை ரோடு பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் ஏற்கனவே சிலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அங்குள்ள மற்றவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 25 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதையடுத்து தச்சநல்லூர் மண்டல உதவி ஆணையாளர் அய்யப்பன் தலைமையில் அதிகாரிகள் அந்த பகுதியில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். சுகாதார பணியாளர்கள் பிளீச்சிங் பவுடர் தூவி கிருமிநாசினி தெளித்தனர்.
கலெக்டர் அலுவலகம்
நெல்லை கொக்கிரகுளம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள 2 துறைகளின் அலுவலகத்தில் பணியாற்றும் 3 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் இளங்கோ தலைமையில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
சம்பந்தப்பட்ட துறை அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டு சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
பஸ்களில் கிருமி நாசினி தெளிப்பு
மேலும் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நெல்லை வண்ணார்பேட்டை பகுதியில் பஸ் நிறுத்தத்துக்கு வந்து சென்ற பஸ்களில் சுகாதாரப்பணியாளர்கள் கிருமிநாசினி தெளித்தனர். பயணிகள் கை பிடித்து ஏறும் படிக்கட்டு கம்பிகள் மற்றும் கைப்பிடிகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
காய்ச்சல் கண்டறியும் முகாம்
நெல்லை மாநகரில் கொரோனா நோயாளிகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்கவும், கொரோனாவை கட்டுப்படுத்தவும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. நெல்லை சந்திப்பு பஸ் நிலைய வளாகத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வரும் வடமாநில தொழிலாளர்கள் 40 பேருக்கு காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்தப்பட்டது.
இதேபோல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களின் குடியிருப்பு பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் முகாம், கொரோனா பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அந்த பகுதி மக்களுக்கு சத்து மாத்திரைகள், காய்ச்சல் தடுப்பு மாத்திரைகளும் முன்னெச்சரிக்கையாக வழங்கப்படுகிறது. இதுதவிர சித்த மருத்துவத்துறை சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story