மாற்றுத்திறனாளி மாணவிக்கு ஸ்கூட்டர் வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி கைது
மாற்றுத்திறனாளி மாணவிக்கு ஸ்கூட்டர் வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரியை கைது செய்து ஊழல் தடுப்பு படையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குடகு: மாற்றுத்திறனாளி மாணவிக்கு ஸ்கூட்டர் வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரியை கைது செய்து ஊழல் தடுப்பு படையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ரூ.9 ஆயிரம் லஞ்சம்
குடகு மாவட்ட மாற்றுத்திறனாளி நல வாரிய அதிகாரியாக இருப்பவர் சம்பத். இந்த நிலையில், அந்தப்பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி ஒருவருக்கு 3 சக்கர ஸ்கூட்டர் ஒதுக்கப்பட்டிருந்தது. இதனை வாங்குவதற்காக அந்த மாற்றுத்திறனாளி மாணவி குடகு மாவட்ட மாற்றுத்திறனாளி நல வாரிய அலுவலகத்துக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த அதிகாரி சம்பத், 3 சக்கர ஸ்கூட்டர் வேண்டுமென்றால் தனக்கு ரூ.9 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த மாணவி, இதுகுறித்து ஊழல் தடுப்பு படை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் ஊழல் தடுப்பு படை போலீசார் அந்த மாணவிக்கு சில அறிவுரை வழங்கினர்.
கைது
இதையடுத்து அந்த மாணவி, அதிகாரி சம்பத்தை தொடர்புகொண்டு பேசினார். அப்போது, ரூ.3 ஆயிரம் லஞ்சம் கொடுப்பதாக மாணவி தெரிவித்துள்ளார். அதற்கு சம்பத்தும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து ஊழல் தடுப்பு படையினர் கொடுத்த ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை அந்த மாணவி, அதிகாரி சம்பத்தை சந்தித்து கொடுத்தார்.
அந்த பணத்தை சம்பத் வாங்கினார். அப்போது அந்தப்பகுதியில் மறைந்து இருந்த ஊழல் தடுப்பு படையினர், சம்பத்தை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story