கர்நாடகத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது
கர்நாடகத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. அத்தியாவசிய பொருட்களை வாங்க 4 மணி நேரம் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு: கர்நாடகத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. அத்தியாவசிய பொருட்களை வாங்க 4 மணி நேரம் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் இறப்பவர்கள்
கர்நாடகத்தில் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. அதே போல் கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் பெங்களூருவை காலி செய்துவிட்டு மக்கள் சொந்த ஊருக்கு சென்றுக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த கர்நாடகத்தில் 27-ந்தேதி (நேற்று) இரவு 9 மணி முதல் 11-ந் தேதி வரை 14 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று கர்நாடக அரசு நேற்று முன்தினம் அறிவித்தது.
மருத்துவ உபகரணங்கள்
அதன்படி கர்நாடகத்தில் முழு ஊரடங்கு நேற்று அமலுக்கு வந்தது. இதையடுத்து அரசு, தனியார் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. தனியார் வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. உற்பத்தித்துறையை சேர்ந்த தொழில் நிறுவனங்கள், மருத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், உணவு உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பெண்கள் அதிகமாக பணியாற்றும் ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
இதனால் அந்த நிறுவனத்தை நடத்துகிறவர்கள், 50 சதவீத ஊழியர்களுடன் ஆயத்த ஆடை நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சரக்கு போக்குவரத்திற்கு எந்த தடையும் இல்லை.
பெரும்பாலான மேம்பாலங்கள்
மருத்துவமனைக்கு செல்பவர்கள், தடுப்பூசி போட்டுக்கொள்ள செல்பவர்கள், விமான நிலையங்களுக்கு செல்பவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலுக்கு வந்ததை அடுத்து தலைநகர் பெங்களூருவில் பெரும்பாலான மேம்பாலங்கள் இரும்பு தடுப்பு வைத்து மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுபவர்களின் வசதிக்காக பெங்களூருவில் குறைந்த எண்ணிக்கையில் பி.எம்.டி.சி. பஸ்கள் இயக்கப்படுகின்றன.
ஊரடங்கு காரணமாக வெளியூர்களை சேர்ந்தவர்கள் நேற்று மூட்டை முடிச்சுகளுடன் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். பெங்களூருவில் போலீசார் பல்வேறு முக்கிய சாலைகளை இரும்பு தடுப்புகள் வைத்து மூடியுள்ளனர். ஆங்காங்கே சர்க்கிள்களில் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அடையாள அட்டை
மேலும் தேவையின்றி வெளியில் நடமாடுபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்யும் நடவடிக்கையிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அடையாள அட்டையை காட்டி செல்லலாம் என்று அரசு கூறியுள்ளது.
மருத்துவமனைகள், மருந்தகங்கள் இயங்க எந்த தடையும் இல்லை.
காய்கறி, பழங்கள், பால், பலசரக்கு கடைகளை காலை 6 மணிக்கு திறந்து காலை 10 மணிக்குள் மூட வேண்டும். இந்த 4 மணி நேரத்திற்குள் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ள வேண்டும்.
Related Tags :
Next Story