ஆப்பக்கூடல் அருகே பரபரப்பு: பெற்ற மகளை பார்க்க விடாததால் உறவினரின் ஒர்க்‌ஷாப்பை இடித்து தள்ளிய வாலிபர்- பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள் சாலைமறியல்


ஆப்பக்கூடல் அருகே பரபரப்பு: பெற்ற மகளை பார்க்க விடாததால் உறவினரின் ஒர்க்‌ஷாப்பை இடித்து தள்ளிய வாலிபர்- பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 28 April 2021 4:44 AM IST (Updated: 28 April 2021 4:48 AM IST)
t-max-icont-min-icon

பெற்ற மகளை பார்க்க விடாததால் உறவினரின் ஒர்க்‌ஷாப்பை வாலிபர் ஒருவர் இடித்து தள்ளினார். பொதுமக்கள் பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.

அந்தியூர்,

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள இளம்பிள்ளை பகுதியை சேர்ந்தவர் செந்தமிழ்ச்செல்வன் (வயது 37). சொந்தமாக பொக்லைன் எந்திரம் வைத்துக்கொண்டு வாடகைக்கு சென்று வந்தார். 

இவருக்கும் ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே நல்லி கவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்த ரேவதி என்ற பெண்ணுக்கும் கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கடந்த 2012-ம் ஆண்டு நெல்சிகா என்ற ஒரு பெண் குழந்தை பிறந்தது. மீண்டும் 2014-ம் ஆண்டு ஆண் குழந்தையும் பிறந்தது.

இந்தநிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த செந்தமிழ்செல்வன் தன் மனைவியையும், ஆண் குழந்தையையும் கடந்த 2014-ம் ஆண்டு கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தமிழ்செல்வனை கைது ெசய்து சிறையில் அடைத்தார்கள். 

செந்தமிழ்செல்வனின் மகள் நெல்சிகா ஆப்பக்கூடல் அருகே உள்ள நல்லிகவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்த தன்னுடைய தாய் மாமா சேகர் என்பவர் வீட்டில் வளர்ந்து வந்தார். இந்தநிலையில் ஜெயிலில் இருந்து ஜாமீனில் வெளியேவந்த செந்தமிழ்ச்செல்வன் தனது மகளை பார்க்க வேண்டும் என்று சேகரிடம் கூறியுள்ளார். அதற்கு  சேகர் மறுப்பு தெரிவித்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த செந்தமிழ்ச்செல்வன் கவுந்தப்பாடி ரோட்டில் உள்ள சேகரின் ஒர்க் ஷாப்பை பொக்லைன் எந்திரம் மூலம் நேற்று இடித்து தள்ளினார். மேலும் சேகரின் வீட்டையும் இடித்து தள்ளுவதற்காகு நல்லிகவுண்டன் புதூருக்கு பொக்லைன் எந்திரத்தை ஓட்டிச் சென்றார். இதை அறிந்த நல்லிகவுண்டன்புதூர் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து பொக்லைன் எந்திரத்ைத சிறைபிடித்தார்கள். உடனே செந்தமிழ்செல்வன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். 

இந்தநிலையில் தப்பி ஓடிய செந்தமிழ்செல்வனை உடனே கைது செய்து எங்கள் முன் கொண்டுவந்து நிறுத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்து, நல்லகவுண்டன் புதூரில் ஆப்பக்கூடல்-அத்தாணி ரோட்டில் 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.

இதையறிந்த  ஆப்பக்கூடல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மேலும் செந்தமிழ்செல்வனையும் கைது செய்தார்கள். அதன்பின்னரே பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டார்கள். 
இந்த சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story