சிவகிரி அருகே பயங்கரம் கழுத்தை அறுத்து முதியவர் படுகொலை- கொலையாளிக்கு போலீஸ் வலைவீச்சு
சிவகிரி அருகே முதியவர் ஒருவர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்தவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சிவகிரி
சிவகிரி அருகே முதியவர் ஒருவர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்தவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கூலி தொழிலாளி
புதுக்கோட்டை மாவட்டம் கொடுங்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் சாமிக்கண்ணு (வயது 75). இவருடைய மனைவி ஆராயி (70). இவர்களுக்கு 3 மகன்கள், 4 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இதில் சாமிக்கண்ணுவின் மகன்கள் சுப்பிரமணி, ஆறுமுகம் ஆகிய இருவரும் ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள கந்தசாமிபாளையத்தில் சில வருடங்களாக தங்கி கூலிவேலை செய்து வருகிறார்கள்.
மகன் சுப்பிரமணியுடன் சாமிக்கண்ணுவும் தங்கியிருந்தார். சாமிக்கண்ணு விவசாய கூலிவேலைக்கு சென்றதோடு, சாலையோரம் கிடக்கும் பாட்டில்களையும் சேகரித்து விற்று வந்தார்.
கழுத்தை அறுத்து...
வழக்கம்போல் சாமிக்கண்ணு நேற்று முன்தினம் இரவு சாப்பிட்ட பின்னர் அருகே இருந்த சரவணபவன் என்பவரின் தோட்டத்துக்கு சென்று, அங்குள்ள ஆட்டுப்பட்டியின் முன்புறம் கயிற்று கட்டில் போட்டு தூங்கினார்.
இந்தநிலையில் சரவணபவன் தோட்டத்து பக்கம் தொழிலாளி ஒருவர் நேற்று காலை சென்றார். அப்போது கட்டிலில் ரத்தவெள்ளத்தில் சாமிக்கண்ணு பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து உடனே சிவகிரி போலீசாருக்கும், சாமிக்கண்ணுவின் மகன்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தார்கள்.
அப்போது சாமிக்கண்ணுவின் கழுத்தை அறுத்தும், நெஞ்சு பகுதியில் கத்தியால் குத்தியும் கொலை செய்து இருந்தது தெரிய வந்தது. இதற்கிடையே தகவல் கிடைத்து சாமிக்கண்ணுவின் மகன்கள் சுப்பிரமணியமும், ஆறுமுகமும் அங்கு அலறி அடித்து ஓடிவந்து பார்த்தார்கள்.
கொலையாளி யார்?
மேலும் பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், இன்ஸ்பெக்டர்கள் ஜீவானந்தம் (மலையம்பாளையம்), சண்முகம் (சிவகிரி) மற்றும் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார்கள். ஈரோட்டில் இருந்து மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த இடத்தில் மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.
இதைத்தொடர்ந்து போலீசார், சாமிக்கண்ணுவின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார்கள். மேலும் இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமிக்கண்ணுவை கொலை செய்த கொலையாளியை வலைவீசி தேடி வருகிறார்கள். கொலையாளி பிடிபட்டால் தான் முதியவர் கொலைக்கான காரணங்கள் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story