கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு பணிக்கு எதிர்ப்பு: பொதுப்பணித்துறை அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டம்


கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு பணிக்கு எதிர்ப்பு: பொதுப்பணித்துறை அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 27 April 2021 11:45 PM GMT (Updated: 27 April 2021 11:45 PM GMT)

கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவித்து பொதுப்பணித்துறை அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு
கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவித்து பொதுப்பணித்துறை அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கீழ்பவானி வாய்க்கால்
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் திறந்து விடப்படும் தண்ணீர் மூலமாக 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதில் ஈரோடு, கரூர், திருப்பூர் ஆகிய மாவட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பயன்அடைகிறார்கள். மேலும், கசிவுநீர் திட்டம் மூலமாக 40 ஆயிரம் ஏக்கர் நிலமும் பாசனம் பெறுகிறது.
கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.709 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலமாக வாய்க்காலின் பல்வேறு இடங்களில் கான்கிரீட் தளம் அமைத்து கரைகள் பலப்படுத்தப்பட உள்ளன. இந்த பணிகளை மேற்கொண்டால் கசிவுநீர் திட்டம் பாதிக்கப்படும் என்று ஒரு தரப்பு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதேசமயம் கடைமடை வரை முறையாக தண்ணீர் செல்லும் வகையில் சீரமைப்பு பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்று மற்றொரு தரப்பு விவசாயிகளும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
தர்ணா போராட்டம்
கடந்த வாரம் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளை அழைத்து ஈரோடு ஆர்.டி.ஓ. சைபுதீன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தநிலையில் பொதுப்பணித்துறையினரை கண்டித்து தமிழக விவசாயிகள் சங்க மாநில கவுரவ தலைவர் வெங்கடாசலம், ஈ.வி.கே.சண்முகம் உள்பட பலர் ஈரோடு பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலக வளாகத்தில் நேற்று தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
அவர்களிடம் செயற்பொறியாளர் அருள் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது விவசாயிகள் கூறுகையில், “கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகளை தொடங்கக்கூடாது. மேலும், அந்த திட்டம் குறித்த திட்ட அறிக்கையை வழங்க வேண்டும்”, என்றனர். அதற்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம் என்று செயற்பொறியாளர் அருள் தெரிவித்தார். ஆனால் விவசாயிகள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விண்ணப்பித்தால் காலதாமதம் ஏற்படும் என்றும், உரிய விளக்கம் எங்களுக்கு கிடைக்காது என்றும் விவசாயிகள் தெரிவித்தனர். இதையடுத்து திட்ட வரைவு அறிக்கை நகலை வழங்க அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர். அதன்பிறகு விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story