சாலையோரத்தில் வசிப்பவர்கள் தூங்கும் பகுதியாக இருந்த மாநகராட்சி அலுவலகத்தை சுற்றி கிருமி நாசினி தெளிப்பு


சாலையோரத்தில் வசிப்பவர்கள் தூங்கும் பகுதியாக இருந்த மாநகராட்சி அலுவலகத்தை சுற்றி கிருமி நாசினி தெளிப்பு
x
தினத்தந்தி 28 April 2021 5:17 AM IST (Updated: 28 April 2021 5:17 AM IST)
t-max-icont-min-icon

சாலையோரத்தில் வசிப்பவர்கள் தூங்கும் பகுதியாக இருந்த ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தை சுற்றி கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

ஈரோடு
சாலையோரத்தில் வசிப்பவர்கள் தூங்கும் பகுதியாக இருந்த ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தை சுற்றி கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
சாலையோரத்தில் வசிப்பவர்கள்
ஈரோடு மாநகர் பகுதியில் இரவு நேரத்தில் சுற்றி வந்தால் பல நூறு பேர் தங்கள் வாழ்விடமாக சாலையோரங்களை பயன்படுத்தி வருவது தெரியும். கடைகளின் திண்ணைகள், மறைவான பகுதிகள் என்று பல இடங்களில் ஏராளமானவர்கள் தூங்கிக்கொண்டு இருப்பார்கள். காலையில் எழுந்து ஏதேனும் கிடைத்த வேலைக்கு சென்று விட்டு திரும்பவும் இரவு அதே இடத்தில் வந்து உறங்குபவர்கள் உள்ளனர்.
இதுபோல் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தின் முன்பு ஏராளமானவர்கள் தினசரி தங்கும் பகுதியாக அங்குள்ள நடைபாதை பகுதி அமைந்து இருக்கும்.
உணவு
ஏழைகளுக்கு உணவுகள் வழங்க வேண்டும் என்று விருப்பப்படும் பலரும் நேரடியாக வந்து உணவு வினியோகம் செய்யும் இடமாகவும் இது இருந்தது. அதுமட்டுமின்றி, பெரிய மாரியம்மன் கோவிலில் தினசரி வழங்கப்படும் அன்னதான திட்டத்தில் உணவு கிடைப்பதாலும் பலர் இந்தபகுதியை தங்கள் நிரந்தர வாழ்விடமாக கொண்டு இருந்தனர். இந்தநிலையில் கொரோனா பரவல் காரணமாக ஒரே இடத்தில் பொதுமக்கள் கூட்டம் சேருவதை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கிருமிநாசினி தெளிப்பு
அதன் ஒரு நிகழ்வாக நேற்று ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தை சுற்றி உள்ள நடைபாதை பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அங்கு பிளீச்சிங் பவுடர் போடப்பட்டது. மேலும், நடைபாதை பகுதிகளில் யாரும் செல்லாதவாறு எச்சரித்து, கயிறுகள் கட்டப்பட்டன.
இதுபற்றி மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன் கூறும்போது, தற்போது மாநகராட்சியில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஒவ்வொரு தனி மனிதனின் உயிரும் மிகவும் முக்கியம். எனவே யாரும் எங்கேயும் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். சாலையோரத்தில் வசிப்பவர்கள் இந்த கொரோனா அபாயத்தை புரிந்து கொண்டு தங்களுக்கு என்று தனிப்பட்ட தங்கும் பகுதிகளை தேர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். கூட்டமாக ஒரே இடத்தில் தங்கி இருந்து, அதன் மூலம் நோய்த்தொற்று ஏற்பட்டால் மிகப்பெரிய அபாய நிலைக்கு நாம் தள்ளப்படுவோம் என்றார்.

Next Story