குரங்குகளை வனத்துறையினர் பிடித்ததை தடுத்த தொழிலாளிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை-சேலம் கோர்ட்டு தீர்ப்பு
அட்டகாசம் செய்த குரங்குகளை வனத்துறையினர் பிடித்த போது, அதனை தடுத்த தொழிலாளிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
சேலம்:
அட்டகாசம் செய்த குரங்குகளை வனத்துறையினர் பிடித்த போது, அதனை தடுத்த தொழிலாளிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
குரங்குகள் அட்டகாசம்
சேலம் கன்னங்குறிச்சி பாரதியார் நகர் பகுதியை சேர்ந்தவர் மோகன்குமார் (வயது 40). தொழிலாளி. மேலும் இவர் ஏற்காடு அடிவாரம் பகுதியில் இயற்கை குடில் அமைத்திருந்தார். அந்த பகுதியில் குரங்குகள் அட்டகாசம் செய்வதாக பொதுமக்கள் வனத்துறையினருக்கு புகார் கொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து வனத்துறையினர் கடந்த 21.10.2020 அன்று ஏற்காடு அடிவாரம் பகுதியில் சுற்றித்திரிந்த குரங்குகளை பிடித்து மலைப்பகுதியில் விடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மோகன்குமார் இந்த பகுதியில் உள்ள குரங்குகளை பிடிக்க கூடாது என்று வனத்துறையினரை தடுத்து உள்ளார். மேலும் அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டார்.
சிறை தண்டனை
இது குறித்து வனத்துறையினர் கன்னங்குறிச்சி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அரசு பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்-4-ல் நடைபெற்று வந்தது.
வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி வனத்துறையினரை அரசு பணி செய்ய விடாமல் தடுத்ததாக மோகன்குமாருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாஜிஸ்திரேட்டு தீர்ப்பு அளித்தார்.
Related Tags :
Next Story