சேலம் மாநகராட்சி பகுதிகளில் 4,269 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு-ஆணையாளர் ரவிச்சந்திரன் தகவல்


சேலம் மாநகராட்சி பகுதிகளில் 4,269 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு-ஆணையாளர் ரவிச்சந்திரன் தகவல்
x
தினத்தந்தி 28 April 2021 6:06 AM IST (Updated: 28 April 2021 6:06 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாநகராட்சி பகுதிகளில் 4,269 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக ஆணையாளர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

சேலம்:
சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சேலம் மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மாநகராட்சி பகுதிகளில் 72 காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று மட்டும் நடந்த முகாம்களில் 3 ஆயிரத்து 547 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,423 பேர் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 79 பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அங்கு தேவையான நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 4 ஆயிரத்து 269 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் தலைமையிலான குழுவினர் முக கவசம் அணியாத நபர்கள் மற்றும் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்காத நிறுவனங்களை கண்டறிந்து அபராதம் விதித்து வருகின்றனர்.
நேற்று மட்டும் முக கவசம் அணியாமல் வெளியில் வந்த 59 பேருக்கு தலா ரூ.200-ம், வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காத 44 சிறு வணிக நிறுவனங்களுக்கு தலா ரூ.500-ம் அபராதம் விதிக்கப்பட்டது. மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story