திருவள்ளூர் அருகே தி.மு.க. நிர்வாகியிடம் நூதன முறையில் ரூ.60 ஆயிரம் பறிப்பு


திருவள்ளூர் அருகே தி.மு.க. நிர்வாகியிடம் நூதன முறையில் ரூ.60 ஆயிரம் பறிப்பு
x

திருவள்ளூர் அருகே தி,மு.க. நிர்வாகியிடம் நூதன முறையில் ரூ.60 ஆயிரம் பறிக்கப்பட்டது.

திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த திருவாலங்காடு ஒன்றியம் களாம்பாக்கம் கிராமம் பள்ளத்தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 53), விவசாயி. திருவள்ளூர் மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்புக்குழு உறுப்பினராக உள்ளார். இந்த நிலையில் நேற்று காலை பன்னீர்செல்வம் தனது வயலில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக பேரம்பாக்கத்தில் உள்ள வங்கிக்கு பணம் எடுக்க சென்றார்.

வங்கியில் இருந்து ரூ.60 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென அவரது உடலில் ஸ்பிரே அடித்தனர். சிறிது நேரத்தில் அவர் உடலில் அரிப்பு ஏற்பட்டு வங்கியின் சற்று தொலைவில் நின்று கையில் வைத்திருந்த பணத்துடன் உடலை சொறிந்து கொண்டிருந்தார்.

பணம் பறிப்பு

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் திடீரென அவரது கையில் இருந்த ரூ.60 ஆயிரத்தை பறித்துக்கொண்டு அவரை கீழே தள்ளிவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச்சென்று விட்டனர். இதனால் பதறிப்போன அவர் திருடன், திருடன் என்று கூச்சலிட்டும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்களால் அவர்களை பிடிக்க முடியவில்லை. உடலில் அரிப்பு ஏற்பட்டதால் அவர் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றார்.

இது குறித்து மப்பேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து வங்கிக்கு வந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா மற்றும் அதன் அருகே உள்ள கடைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள மர்ம நபர்களின் உருவங்களை வைத்து விசாரித்து வருகின்றனர். 

Next Story