கஞ்சா கும்பலை பிடிக்க முயன்ற போது போலீசார் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய ஆந்திர கும்பல்
ஆந்திராவில் கஞ்சா கும்பலை பிடிக்க முயன்றபோது, நாட்டு வெடிகுண்டு வீசியதில் 3 போலீஸ்காரர்கள் காயமடைந்தனர்.
பூந்தமல்லி,
பூந்தமல்லி அடுத்த புளியம்பேடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி விற்ற கல்லூரி மாணவர்கள் உட்பட 8 பேரை கடந்த மாதம் மதுரவாயல் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த கஞ்சா விற்பனை கும்பலின் தலைவனான ஆந்திராவைச் சேர்ந்த அரி என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தநிலையில், மதுரவாயல் போலீசார் அவனை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
மேலும், ஆந்திராவிலிருந்து தொடர்ந்து கஞ்சா அதிக அளவில் சப்ளை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து, மதுரவாயல் சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் தலைமையில் முதல்நிலைக் காவலர் வெயில் முத்து மற்றும் போலீசார் மிலன் அடங்கிய தனிப்படை போலீசார் கஞ்சா கும்பலை பிடிக்க ஆந்திர மாநிலம் தடாவுக்கு சென்றனர்.
அங்கு கஞ்சா வியாபாரி அரி உள்ளிட்ட அவரது கூட்டாளிகள் பதுங்கியிருந்த வீட்டை போலீசார் சுற்றி வளைத்தனர். பின்னர் சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார் அதிரடியாக வீட்டுக்குள் நுழைந்த போது, அங்கிருந்த கஞ்சா கும்பல் போலீசாரை கண்டதும் நாட்டு வெடிகுண்டை வீசியதாக கூறப்படுகிறது.
3 பேர் கைது
இதில் நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறியதில், சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீஸ்காரர் வெயில்முத்து ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இந்த சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து, அவர்களுக்கு முதலுதவி செய்தனர். அதைத்தொடர்ந்து, கஞ்சா வியாபாரியான அரியின் கூட்டாளிகளான வண்டலூரை சேர்ந்த நரேஷ், டில்லி மற்றும் ஆந்திராவை சேர்ந்த முரளி ஆகிய 3 பேரை கைது செய்து சென்னை அழைத்து வந்துள்ளனர். அங்கிருந்து சுமார் 2 கிலோ கஞ்சா மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து சென்னை திரும்பிய போலீசார் மதுரவாயலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தனிப்படையினர் போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் ஆந்திரா மாநிலம் தடா சென்றது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஆந்திர மாநில போலீசார் மதுரவாயல் போலீஸ் நிலையம் வந்து கைது செய்து அழைத்து வரப்பட்டவர்களிடம் விசாரணை செய்தனர். காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் போலீசாரிடமும் விசாரணை நடத்தி விட்டு சென்றனர்.
Related Tags :
Next Story