வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 500-ஐ நெருங்கியது


வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 500-ஐ நெருங்கியது
x
தினத்தந்தி 28 April 2021 4:48 PM IST (Updated: 28 April 2021 4:48 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 500-ஐ நெருங்கியது

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனாலும் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து கொண்டே செல்கிறது. வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 441 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்றைய பரிசோதனையின் முடிவில் பாதிப்பு புதிய உச்சத்தை எட்டி உள்ளது. ஒரேநாளில் 497 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதியானது. இதன் மூலம் வேலூர் மாவட்டத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 500-ஐ நெருங்கி உள்ளது. 

வேலூர் மாநகராட்சி பகுதியில் 300-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று அதிகம் காணப்படும் பகுதிகள், தெருக்களில் தகரத்தால் அடைத்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த 497 பேரும் சிகிச்சைக்காக அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், உடன் பணிபுரிந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவினால் 25 ஆயிரத்து 807 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 23 ஆயிரத்து 31 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 373 பேர் உயிரிழந்துள்ளனர். 2,403 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story