பனப்பாக்கம் அருகே பொருட்கள் வழங்காததால் ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகை


பனப்பாக்கம் அருகே பொருட்கள் வழங்காததால் ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 28 April 2021 1:18 PM GMT (Updated: 28 April 2021 1:18 PM GMT)

பனப்பாக்கம் அருகே 6 மாதங்களாக சரியாக பொருட்கள் வழங்காததால் பொதுமக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டனர்.

நெமிலி

6 மாதமாக திறக்க வில்லை

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தை அடுத்த புதுப்பட்டு கிராமத்தில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் புதுப்பட்டு, புதுப்பட்டு காலனி, ராமாபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கான அரிசி, சர்க்கரை, பருப்பு, கோதுமை மற்றும் மண்எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில் கடந்த 6 மாதத்திற்கும் மேலாக ரேஷன் கடை ஒழுங்காக திறக்கப்படவில்லை என்றும், மாதத்தில் ஓரிரு நாட்கள் மட்டுமே ரேஷன் கடை திறக்கப்படுவதால் முறையாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவது இல்லை எனக்கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடந்த மார்ச் மாதம் ரேஷன் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகாரி ஆய்வு 

தற்போது ஏப்ரல் மாதம் முடிவடைய சிலநாட்களே உள்ள நிலையில் ஏப்ரல் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் கிராம பொதுமக்கள் மீண்டும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். 

இதுகுறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நேற்றுமுன்தினம் முதுநிலை ஆய்வாளர் கண்ணன் (பொது வினியோக திட்டம்) புதுப்பட்டு ரேஷன் கடையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுமக்கள் சார்பில் ரேசன் கடை முறையாக திறக்கப்படவில்லை என்றும், சரியாக வழங்கப்படவில்லை என்றும் எழுத்து மூலமாக புகார் தெரிவித்தனர். 
பொதுமக்கள் முற்றுகை

புகாரை பெற்றுக்கொண்ட ஆய்வாளர் கண்ணன் புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்பதாகவும், புதன்கிழமை கடை திறக்க ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளார். ஆனால் நேற்றும் குறிப்பிட்ட நேரத்திற்கு மேலாகியும் ரேஷன் கடை திறக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டு முறையாக ரேஷன் பொருட்கள் வழங்கக்கோரி கோஷமிட்டனர்.

மாவட்ட நிர்வாகம் உடனடியாக ரேஷன் கடையை திறந்து பொருட்கள் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Next Story