மருந்து நிறுவனங்கள் அறிவித்துள்ள அதிக விலையால் ஏழைகளுக்கு மட்டுமே இலவச தடுப்பூசி மந்திரி ராஜேஷ் தோபே தகவல்
தற்போது மருந்து நிறுவனங்கள் அறிவித்துள்ள விலையால் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு மட்டுமே இலவசமாக தடுப்பூசி போடமுடியும் என சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறியுள்ளார்.
மும்பை,
நாடு முழுவதும் வருகிற 1-ந் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. எனினும் ஏற்கனவே தடுப்பு மருந்து இல்லாமல் தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டு வரும் நிலையில், அனைவருக்கும் தடுப்பூசி போடுவது எந்தளவுக்கு சாத்தியமாகும் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இதற்கிடையே புனே சீரம் நிறுவனம் தங்களின் கோவிஷில்டு தடுப்பு மருந்து மாநில அரசுக்கு ரூ.400, தனியாருக்கு ரூ.600 என அறிவித்து உள்ளது. இதேபோல கோவாக்சின் நிறுவனம் தடுப்பு மருந்து மாநில அரசுக்கு ரூ.600, தனியாருக்கு ரூ.1,200 என தெரிவித்து உள்ளது. இதற்கு மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து மத்திய அரசு தடுப்பு மருந்து விலையை குறைக்க மருந்து நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்தநிலையில் இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறியதாவது:-
மத்திய அரசு தலையிட்டு உள்ளதால் தடுப்பு மருந்து விலை குறையும் என நம்புகிறோம். மராட்டியத்தில் 18 வயது முதல் 44 வயது வரை 5.71 கோடி பேர் உள்ளனர். இவர்களுக்கு 12 கோடி தடுப்பு மருந்து தேவைப்படுகிறது. எனவே எப்போது மருந்து கிடைக்கும் என கேட்டு சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்களுக்கு கடிதம் எழுதி உள்ளோம். அவா்களின் பதிலுக்காக காத்து இருக்கிறோம். தற்போது மருந்து நிறுவனங்கள் அறிவித்துள்ள விலையின்படி மாநில அரசு 5.71 கோடி மக்களுக்கு தடுப்பூசி போட ரூ.7 ஆயிரத்து 500 கோடி செலவு செய்ய வேண்டும். இதுபோன்ற ஒரு சூழலில் மாநில அரசு பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழைகளுக்கான தடுப்பூசி செலவை மட்டுமே ஏற்றுக்கொள்ளும். இது குறித்து மந்திரி சபை ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவா் கூறினார்.
இதேபோல தற்போது மாநிலத்தில் தடுப்பு மருந்து குறைந்த அளவில்தான் இருப்பதாகவும், மே 20-ந் தேதிக்கு பிறகு தான் கோவிஷீல்டு மருந்து சப்ளை செய்ய முடியும் என சீரம் நிறுவனம் தெரிவித்து இருப்பதாகவும் ராஜேஷ் தோபே கூறினார்.
கடந்த சில நாட்களுக்கு முன் மாநிலத்தில் அனைத்து மக்களுக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என தேசிவாத காங்கிரசை சேர்ந்த மந்திரி நவாப் மாலிக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story