தூத்துக்குடி மாவட்ட மக்கள் கவலைப்பட தேவையில்லை கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்


தூத்துக்குடி மாவட்ட மக்கள் கவலைப்பட தேவையில்லை கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்
x
தினத்தந்தி 28 April 2021 8:53 PM IST (Updated: 28 April 2021 8:53 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மக்கள் கவலைப்பட தேவையில்லை என கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி:
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதால் தூத்துக்குடி மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்று கலெக்டர் செந்தில்ராஜ் கூறினார்.
இதுகுறித்து அவர் நேற்று தூத்துக்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆக்சிஜன் உற்பத்தி
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளிக்கவில்லை. அந்த ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை திறக்க மட்டுமே அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை மட்டும் திறக்க தமிழக அரசும் ஒப்புக்கொண்டு உள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை 2018-ம் ஆண்டில் மூடியதே தமிழக அரசு தான். அதுமட்டுமல்லாமல் இது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்ற போது, தமிழக அரசு தொடர்ந்து வாதங்களை முன்வைத்ததால், ஆலையை தமிழக அரசு மூடியது சரிதான் என ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கிலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டில் தமிழக அரசு தொடர்ந்து வாதங்களை முன்வைத்து வருகிறது. ஆலையை ஏன் மூடினோம் என்பதற்கான சான்றுகளையும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்து உள்ளது.
உறுதியாக
ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. இதற்காக தான் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. அந்த பிரதான வழக்குக்கும், தற்போது ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி அளித்திருப்பதற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என சுப்ரீம் கோர்ட்டு தெளிவாக கூறி உள்ளது.
தற்போது நாட்டில் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளதால், தேசிய அவசர நிலையை கருத்தில் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை மட்டும் திறக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து உள்ளது.
ஆக்சிஜன் உற்பத்திக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் மூலமே மின்சாரம் வழங்கப்படும். ஆலை வளாகத்தில் உள்ள அனல்மின் நிலையம் இயக்கப்படாது என்பதையும் சுப்ரீம் கோர்ட்டு தெளிவாக தெரிவித்து உள்ளது.
அச்சம் தேவையில்லை
எனவே, இது ஸ்டெர்லைட் ஆலை திறப்பு கிடையாது. ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை மட்டும் திறந்து, அதில் வரும் ஆக்சிஜனை கொரோனா நோயாளிகளுக்கு மட்டும் பயன்படுத்துவதற்கு தான் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு வழங்கி உள்ளது. அதுவும் 4 மாதங்களுக்கு மட்டும் தான். 4 மாதங்களுக்கு பிறகு கொரோனா இல்லாத நிலை ஏற்பட்டால் ஆக்சிஜன் உற்பத்தி நிலையமும் மூடப்படும். எனவே, தூத்துக்குடி மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. இது தான் இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு நகல் கிடைத்ததும், அதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story