வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்லும் வேட்பாளர்கள், முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை
கடலூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்லும் வேட்பாளர்கள், முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடந்தது.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் முடிவடைந்தது. இதையடுத்து வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பூட்டி சீல் வைக்கப்பட்டு 4 இடங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை வருகிற 2-ந்தேதி நடக்கிறது. இந்த வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்லும் வேட்பாளர்கள், முகவர்கள், அரசு அலுவலர்கள் கண்டிப்பாக கொரோனா பரிசோதனை அல்லது தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.
கொரோனா பரிசோதனை
அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள 4 வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு செல்லும் வேட்பாளர்கள், முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து கொள்ள அந்தந்த தேர்தல் அலுவலர்கள் தாலுகா அலுவலகங்கள் மூலம் ஏற்பாடு செய்தனர்.
அதன்படி கடலூர், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையமான கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கல்லூரிக்கு செல்லும் வேட்பாளர்கள், முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை கடலூர் செம்மண்டலம், திருவந்திபுரம் ஆகிய இடங்களில் நடந்தது. இதில் வேட்பாளர்கள், முகவர்கள் கலந்து கொண்டு கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர்.
அனுமதி இல்லை
பரிசோதனை முடிவு வந்த பிறகு அவர்களுக்கு நோய்த்தொற்று பாதிப்பு இல்லை என்றால் வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் அனுமதி கிடையாது. அதேபோல் கொரோனா பரிசோதனை செய்யாதவர்கள், தடுப்பூசி போட்டு இருந்தால், அதற்கான சான்றிதழை காண்பித்தால், வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அரசு அலுவலர்களுக்கு இன்று(வியாழக்கிழமை) தாலுகா அலுவலகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது என்று தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள், முகவர்களும் அந்த தாலுகா அலுவலகம் மூலம் அமைக்கப்பட்ட இடங்களில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். புவனகிரி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அருண்மொழிதேவன், புவனகிரியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதேபோல் மற்ற வேட்பாளர்கள் மற்றும் முகவர்களும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர்.
பண்ருட்டி
இதேபோல் பண்ருட்டி அண்ணா பல்கலைக்கழகம், விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரி, சி.முட்லூர் அரசு கல்லூரி வாக்கு எண்ணும் மையங்களுக்கு செல்லும் பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் ஆகிய சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள், முகவர்களும் அங்கு அமைக்கப்பட்டு இருந்த மையங்களுக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர்.
Related Tags :
Next Story