மது கடத்தலை தடுக்க கடலூரில் இருந்து புதுச்சேரி செல்லும் வாகனங்களில் போலீசார் தீவிர சோதனை


மது கடத்தலை தடுக்க  கடலூரில் இருந்து புதுச்சேரி செல்லும் வாகனங்களில் போலீசார் தீவிர சோதனை
x
தினத்தந்தி 28 April 2021 10:13 PM IST (Updated: 28 April 2021 10:13 PM IST)
t-max-icont-min-icon

மது கடத்தலை தடுக்க கடலூரில் இருந்து புதுச்சேரி செல்லும் வாகனங்களில் போலீசார் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

கடலூர், 

உலக நாடுகள் முழுவதும் கோர தாண்டவம் ஆடி வரும், கொரோனா வைரஸ், புதுச்சேரி மாநிலத்திலும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதன் காரணமாக புதுச்சேரி மாநில அரசு கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்த வகையில் 30-ந் தேதி (நாளை) வரை அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும் என அம்மாநில அரசு கடந்த 2 நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தது. 

இதற்கிடையே புதுச்சேரியில் தேர்தல் வெற்றி கொண்டாட்டத்துக்கு தடை விதிப்பதுடன், வருகிற 3-ந்தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படும் என்றும் மதுக்கடைகள் மூடப்படும் என்றும் நேற்று அரசு தெரிவித்துள்ளது. 

கடைகள் மூடல்

இதன் காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து மதுபானம், சாராயம் மற்றும் கள்ளுக்கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த மதுபிரியர்கள், தற்போது மதுபானம் வாங்குவதற்காக கடலூருக்கு படையெடுக்கின்றனர். வழக்கமாக கடலூர் மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்தவா்களும், வெளி மாநிலங்களை சேர்ந்த மதுபிரியர்களும் விடுமுறை நாட்களில் மது அருந்துவதற்காக புதுச்சேரிக்கு செல்வது வழக்கம். காரணம், தமிழகத்தில் விற்பனையாகும் மதுபானங்களின் விலையை காட்டிலும், புதுச்சேரியில் குறைந்த விலைக்கே மதுபானங்கள் விற்கப்படுகிறது. மேலும் பல்வேறு வகையான மதுபானங்களும் கிடைக்கிறது.

இலவச ஆட்டோ

இதுதவிர புதுச்சேரிக்கு வரும் மதுபிரியர்களை தங்களது கடைகளுக்கு கவர்ந்து இழுத்து வருவதற்காக அனைத்து பேருந்து நிறுத்தங்களில் இருந்தும் மதுபான கடைகளுக்கு இலவசமாக ஆட்டோ இயக்கப்படுகிறது.  
இதனால் தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களை சேர்ந்தவர்களும் மது அருந்துவதற்காக புதுச்சேரிக்கு படையெடுத்து செல்வார்கள். ஆனால் இந்த வழக்கத்தை கொரோனா வைரஸ் அடியோடு மாற்றி விட்டது. அதாவது எந்தவொரு காலத்திலும் புதுச்சேரியை சேர்ந்தவர்கள், தங்கள் மாநிலத்தை விட்டு பிற பகுதிகளுக்கு சென்று மதுபானம் வாங்கியது கிடையாது. 
ஆனால் தற்போது புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த மதுபிரியர்கள் மதுபானம் வாங்க கடலூருக்கு வருகின்றனர். முன்பு பலர் புதுச்சேரி மாநில மதுபானங்களை குறைந்த விலைக்கு வாங்கி, கடலூர் வழியாக கடத்திக் கொண்டு சென்றனர். இதனால் மதுகடத்தலை தடுக்க கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

சோதனை

இந்த சோதனை சாவடியில் காலங்காலமாக புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து கடலூர் நோக்கி வரும் வாகனங்களை மட்டுமே போலீசார் சோதனை செய்து வந்தனர். ஆனால் அந்த வரலாற்றை கொரோனா வைரஸ் தற்போது தலைகீழாக மாற்றியுள்ளது. புதுச்சேரியில் மதுபானக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால், அங்குள்ள மதுபிரியர்கள் கடலூர் வந்து மதுபானங்களை வாங்கி அருந்தி வருகின்றனர்.  பெரும்பாலானோர் அதிகளவில் மதுபானங்களை வாங்கி, புதுச்சேரிக்கு கடத்திச் செல்கின்றனர். இதனை தடுக்க போலீசார் தற்போது கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி செல்லும் வாகனங்களை மறித்து தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

Next Story