கொரோனா பரவலை தடுக்கும் வகையில் விழுப்புரம் உழவர் சந்தை நகராட்சி பள்ளி வளாகத்திற்கு மாற்றம்


கொரோனா பரவலை தடுக்கும் வகையில் விழுப்புரம் உழவர் சந்தை நகராட்சி பள்ளி வளாகத்திற்கு மாற்றம்
x
தினத்தந்தி 28 April 2021 4:48 PM GMT (Updated: 28 April 2021 4:48 PM GMT)

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் விழுப்புரம் உழவர் சந்தை நகராட்சி பள்ளி வளாகத்திற்கு மாற்றப்பட்டது.

விழுப்புரம், 

தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ்  தொற்றின் 2-வது அலையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளதோடு திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை இரவு நேர ஊரடங்கையும், ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் முழுவதும் முழு ஊரடங்கையும் அமல்படுத்தி வருகிறது.

இந்நிலையில் விழுப்புரம் நகரில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிற சூழலில் விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில் தினமும் காலை வேளையில் பொதுமக்கள் சமூக இடைவெளியை மறந்து கூட்டம், கூட்டமாக சென்று காய்கறிகளை வாங்கிச்சென்றனர். இதனால் அரசின் உத்தரவு காற்றில் பறக்க விடப்பட்டதோடு இதுவே கொரோனா பரவலுக்கு வழிவகுப்பதாகவும் அமைந்தது.

உழவர் சந்தை மூடல்

எனவே கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், மக்கள் சமூக விலகலை கடைபிடிக்கும் நோக்கிலும் உழவர் சந்தையை தற்காலிகமாக மூடிவிட்டு அங்குள்ள விவசாயிகளுக்கு மாற்று இடம் ஒதுக்கும்படி நகராட்சி அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை உத்தரவிட்டார்.

அதன்பேரில் நேற்று முதல் விழுப்புரம் உழவர் சந்தை மூடப்பட்டது. அங்குள்ள விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த காய்கறி வகைகளை விற்பனை செய்வதற்கு வசதியாக விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் பீமநாயக்கன்தோப்பில் உள்ள நகராட்சி பள்ளி வளாகத்தை நகராட்சி அதிகாரிகள் ஒதுக்கி கொடுத்தனர். 

இதையடுத்து உழவர் சந்தைக்கு காய்கறிகளை விற்பனை செய்ய வந்த விவசாயிகள், பீமநாயக்கன்தோப்பு நகராட்சி பள்ளி வளாகத்திற்கு காய்கறி மூட்டைகளுடன் சென்றனர். அங்கு ஒவ்வொரு கடைக்கும் இடையே சமூக இடைவெளிக்காக அடையாள குறியீடுகள் வரையப்பட்டிருந்தன. இதன் அடிப்படையில் அங்கு காய்கறிகளை கொண்டு சென்று விற்பனை செய்தனர்.


பள்ளி வளாகத்தில் செயல்பட தொடங்கியது

உழவர் சந்தைக்கு வெளியே சாலையின் இருபுறமும் கடை விரித்து காய்கறிகளை விற்பனை செய்து வந்த விவசாயிகள் சிலர், அங்கிருந்து பீமநாயக்கன்தோப்பு நகராட்சி பள்ளிக்கு செல்ல மறுத்தனர். உடனே அவர்களிடம் நகராட்சி அதிகாரிகள் விரைந்து சென்று கொரோனா நோயின் தாக்கம் குறித்து எடுத்துரைத்ததோடு மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்படிதான் இந்த மாற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, 

எனவே அனைவரும் இங்கிருந்து கடைகளை காலி செய்துவிட்டு பீமநாயக்கன்தோப்பு நகராட்சி பள்ளிக்கு செல்லும்படி அறிவுரை கூறினர். அதன் பிறகு அவர்களும் காய்கறி வகைகளை அள்ளிக்கொண்டு அப்பள்ளி வளாகத்திற்கு சென்றனர்.

இதன் அடிப்படையில் நேற்று காலை 7 மணி முதல் விழுப்புரம் உழவர் சந்தை, தற்காலிகமாக பீமநாயக்கன்தோப்பு நகராட்சி பள்ளி வளாகத்தில் செயல்பட தொடங்கியது. அங்கு 30-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு 3 மீட்டருக்குள் கடை வைக்க அனுமதி வழங்கப்பட்டு அதன்படி அவர்கள் காய்கறி வகைகளை விற்பனை செய்தனர்.

சமூகவிலகல் கடைபிடிப்பு

மேலும் இங்கு காய்கறி வாங்க வந்த பொதுமக்கள், முக கவசம் அணிந்துகொண்டு வந்ததோடு அவர்கள் கூட்டமாக நின்று வாங்காமல் சமூக விலகலை கடைபிடித்து காய்கறி வகைகளை வாங்கிச்சென்றனர்.

 அரசின் பாதுகாப்பு வழிமுறைகளுடன் தற்காலிக உழவர் சந்தை இயங்குகிறதா என்று நகராட்சி அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.Next Story