வால்பாறையில் குடிநீர் குழாயில் உடைப்பு
வால்பாறையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.
வால்பாறை
வால்பாறை பகுதியில் ஆழியாறு வனத்துறையின் சோதனை சாவடி முதல் வால்பாறை நகர் பகுதி வரை பல்வேறு இடங்களில் சாலையோர தடுப்பு சுவர்கள் கட்டுதல், சாலை அகலப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
இதற்காக கருமலை எஸ்டேட் பகுதி முதல் வால்பாறை செல்லும் வழியில் நடுமலை எஸ்டேட் பகுதி வரை சாலைகளை பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் சாலையோரம் சென்ற குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் சாலையில் வீணாக ஓடியது.
இதனால் வால்பாறை பகுதியில் சில இடங்களில் குடிநீர் வினியோகம் தடைப்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து நகராட்சி பணியாளர்கள் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுத்தனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், சாலை அகலப்படுத்தும் பணிக்காக குழி தோண்டும்போது அடிக்கடி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்படுகிறது. இதனால் வால்பாறை நகர மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.
எனவே சாலை விரிவாக்க பணியின் போது நகராட்சி குடிதண்ணீர் விநியோக அதிகாரிகளின் மேற்பார்வையில் பணிகளை செய்ய ஒப்பந்ததாரர்களுக்கு நகராட்சி நிர்வாகத்தினர் அறிவுறுத்த வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story