பொள்ளாச்சியில் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது
பொள்ளாச்சியில் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.3¼ லட்சம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.3¼ லட்சம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டனர்.
போலீசார் வாகன சோதனை
பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ள குற்றவழக்குகளை விரைந்து முடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் உத்தரவிட்டார்.
இதனையடுத்து, பொள்ளாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு சிவக்குமார் தலைமையில், இன்ஸ்பெக்டர் பிரபுதாஸ், சப்-இன்ஸ்பெக்டர் அழகேசன் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் பொள்ளாச்சி தெப்பக்குளம் வீதியில் தனிப்படை போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், போலீசாரை கண்டதும் தப்பிச்செல்ல முயன்றனர்.
திருட்டு, வழிப்பறி
இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை துரத்திச்சென்று பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரையை சேர்ந்த பெருமாள் மகன் முத்துசாமி (வயது 25),
பண்டாரபுரத்தை அடுத்த கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த பால்ராஜ் மகன் பிரகாஷ் (22), பொள்ளாச்சி பி.கே.எஸ்.காலனியை சேர்ந்த சங்கரபாண்டியன் (37) என்பதும், இவர்கள் 3 பேரும் சேர்ந்து மகாலிங்கபுரம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திருடியதையும்,
கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட ஜோதி நகர் பிரஸ்காலனியில் ரோட்டில் நடந்து சென்ற மூதாட்டியிடம் நகை வழிப்பறி செய்ததும் தெரியவந்தது.
3 பேர் கைது
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான தங்க நகைகளையும், வழிப்பறிக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவர்கள் 3 பேரையும் பொள்ளாச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.
Related Tags :
Next Story