கறிக்கோழி விலை சரிவு


கறிக்கோழி விலை சரிவு
x
தினத்தந்தி 28 April 2021 10:27 PM IST (Updated: 28 April 2021 10:27 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவல் எதிரொலியாக கறிக்கோழி விலை சரிந்துள்ளது. இதனால் உற்பத்தியாளர்கள் வேதனையடைந்துள்ளனர்.

பொள்ளாச்சி

கொரோனா பரவல் எதிரொலியாக கறிக்கோழி விலை சரிந்துள்ளது. இதனால் உற்பத்தியாளர்கள் வேதனையடைந்துள்ளனர்.

கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள்

தமிழகத்தில் பல்லடம், உடுமலை, பொள்ளாச்சி, சுல்தான்பேட்டை, நெகமம், கிணத்துக்கடவு, பொங்கலுர், உடுமலை, ஈரோடு, சேலம், நாமக்கல்உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன.

இங்கு, சராசரியாக தினமும் 2 கிலோ எடை கொண்ட 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. பின்னர் இந்த கோழிகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், கேரளா, புதுச்சேரி, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய இடங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

விலை நிர்ணயம்

கறிக்கோழி பண்ணைக் கொள்முதல் விலை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு (பி.சி.சி.) சார்பில், தினமும்  நிர்ணயம் செய்யப்படுகிறது. விலை நிலவரம் நுகர்வு ஏற்றம், இறக்கத்திற்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்படுகிறது.

தற்போது, ஒரு கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்ய ரூ.92 முதல் ரூ.95 வரை உற்பத்தியாளர்களுக்கு செலவாகிறது. கடந்த 16-ந் தேதி ஒரு கிலோ கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை (உயிருடன்) ரூ.123 ஆக இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசுகள் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தி உள்ளன.

கொள்முதல் விலை சரிவு

கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக அன்றாட இறைச்சி நுகர்வு குறைந்து வருகிறது. இதன் எதிரொலியாக கடந்த சில நாட்களாக கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை (விற்பனை விலை) தொடர்ந்து சரிந்து வருகிறது. 

தற்போது ஒரு கிலோ கறிகோழி பண்ணை கொள்முதல் விலை ரூ.82 ஆக உள்ளது. உற்பத்தி செலவு ரூ.95 ஆக உள்ள நிலையில், விற்பனை விலை வெறும் ரூ.82 ஆக மட்டும் உள்ளதால் ஒரு கறிக்கோழி விற்பனை யில் உற்பத்தியாளர்களுக்கு ரூ.13 நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. 

இந்த நஷ்டத்தை சமாளிக்கவும், நுகர்வு நிலையான தன்மைக்கு வரும் வரை தமிழக கறிக்கோழி உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்தியை 20 சதவீத அளவிற்கு தற்காலிகமாக குறைக்க திட்டமிட்டு, அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர்.

Next Story