குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணானது


குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணானது
x
தினத்தந்தி 28 April 2021 10:28 PM IST (Updated: 28 April 2021 10:28 PM IST)
t-max-icont-min-icon

கால்வாய் அமைக்க குழி தோண்டியபோது குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணானது.

ஊட்டி

கால்வாய் அமைக்க குழி தோண்டியபோது குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணானது.

மழைநீர் கால்வாய்

ஊட்டியில் இருந்து குன்னூர் வழியாக மேட்டுப்பாளையத்துக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. கோடை சீசன் காலத்தில் வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வாகனங்களில் வருவதால் ஊட்டி நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. 

இதற்கு தீர்வு காண ஊட்டியில் இருந்து சத்துணவு மையம், நொண்டிமேடு, லவ்டேல் சந்திப்பு வழியாக வேலிவியூ பகுதி வரை சாலை விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது.

நொண்டிமேடு பகுதியில் மழைநீர் தேங்குவதால் சாலை பழுதடைந்து வந்தது. மழைநீர் தேங்காமல் இருக்க அப்பகுதியில் இன்டர்லாக் கற்கள் பதிக்கப்பட்டன. இருப்பினும், மழைநீர் வழிந்தோடியதால் சாலை குண்டும், குழியுமாக இருந்தது.

குழாயில் உடைப்பு

இதை கருத்தில் கொண்டு சாலையோரத்தில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. பொக்லைன் எந்திரம் மூலம் பக்கவாட்டில் குழி தோண்டப்பட்டு, கான்கீரிட் போட்டு கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. கால்வாய் அமைக்கப்படும் பகுதியில் சாலையோரத்தில் உள்ள தங்கும் விடுதிகள், ஓட்டல்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்று ஒரு பகுதியில் மழைநீர் கால்வாய் அமைப்பதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டும் பணி நடந்தது. பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டியபோது குடிநீர் குழாய் மீது பட்டதால், அதில் உடைப்பு ஏற்பட்டு அதிகளவில் குடிநீர் வீணாக வெளியேறியது.

சப்ளை நிறுத்தம்

அணையில் இருந்து ஊட்டி நகருக்கு செல்லும் இறக்கமான பகுதி வழியாக செல்லும் குழாய் என்பதால், குடிநீர் நிற்காமல் வந்து கொண்டே இருந்தது. பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் மண் கொட்டி மூடியும் தண்ணீர் வீணானது. 

தொடர்ந்து ஊட்டி நகருக்கு வரும் குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டது. இதில் ஒரு மணி நேரம் குடிநீர் வீணாகியது.தொடர்ந்து மழைநீர் கால்வாய் அமைப்பதற்காக, சாலையோரத்தில் உள்ள தங்கும் விடுதிகளின் வாகன நிறுத்துமிடம், சுற்றுச்சுவர் அகற்றப்பட்டு வருகிறது.


Next Story