திருப்பூர் செல்லம்நகரில் குப்பைத்தொட்டியால் போக்குவரத்து இடையூறு
திருப்பூர் செல்லம்நகரில் குப்பைத்தொட்டியால் போக்குவரத்து இடையூறு
வீரபாண்டி
திருப்பூர் மங்கலம் ரோடு கே.வி.ஆர். நகர், செல்லம் நகர் பகுதிகளில் அதிக அளவில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இ்ப்பகுதிகளில் பெரும்பாலான சாலைகள் மிகவும் குறுகலாகவும் இடையூறாகவும் காணப்படுகிறது. இதில் பல்வேறு பகுதிகளில் குடிநீருக்காகவும், பாதாளச் சாக்கடைக்காகவும் குழிகள் தோண்டப்பட்டு பல இடங்களில் மூடப்படாமல் உள்ளது. செல்லம் நகர் வழியாக இடுவம்பாளையம், முருகம்பாளையம் சுண்டமெடு ஆகிய பகுதிகளுக்கும் மக்கள் பலரும் பயணித்து வருகின்றனர். செல்லம் நகர் முக்கிய சாலையின் நடுவே பொதுமக்களுக்கு இடையூறாக குப்பைத்தொட்டி உள்ளதால் அவ்வழியாக செல்லும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர். அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பலரும் வீட்டில் சேகரிக்கும் கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகளை குப்பைத் தொட்டியில் போடுவதோடு பல இடங்களில் வீசுவதால் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் குப்பைத்தொட்டி போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதோடு அவ்வழியாக நடந்து செல்லும் பொதுமக்களும் முகம் சுழிக்கும் நிலையில் உள்ளது. குப்பையை அப்புறப்படுத்த மாநகராட்சி ஊழியர்கள் வாரம் ஒரு முறை மட்டுமே வருவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் குப்பைத்தொட்டியை வேறு இடத்துக்கு மாற்றவும் அல்லது பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் வைக்கவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
Related Tags :
Next Story