எண்ணெய் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது பொதுமக்கள் போட்டி போட்டு பாத்திரங்களில் பிடித்துச்சென்றனர்


எண்ணெய் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது பொதுமக்கள் போட்டி போட்டு பாத்திரங்களில் பிடித்துச்சென்றனர்
x
தினத்தந்தி 28 April 2021 10:42 PM IST (Updated: 28 April 2021 10:42 PM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே எண்ணெய் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சாலையில் வழிந்தோடிய எண்ணெயை பொதுமக்கள் போட்டிபோட்டு பாத்திரங்களில் பிடித்துச் சென்றனர்.


விழுப்புரம்

சமையல் எண்ணெய்

சென்னையில் இருந்து சுமார் 15,000 லிட்டர் சுத்திகரிக்கப்படாத சமையல் எண்ணெயை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று கோயம்புத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த சரவணன் லாரியை ஓட்டினார்.
அந்த லாரி நேற்று மதியம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மேட்டத்தூர் என்னும் இடத்தில் வந்த போது எதிர்பாராத விதமாக சாலையின் இடது புறம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் சரவணன் காயமின்றி உயிர் தப்பினார்.  

போட்டி போட்டு பிடித்தனர்

கண்டெய்னரில் இருந்த 15,000 லிட்டர் எண்ணெயும் சாலையில் வழிந்து ஓடத் தொடங்கியது. இதைப் பார்த்து அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் தங்கள் வீட்டில் இருந்த குடம், பக்கெட், கேன் உள்ளிட்ட பாத்திரங்களை எடுத்து வந்து சாலையில் வழிந்தோடிய எண்ணையை போட்டி போட்டு பிடித்துச் சென்றனர். பாத்திரம் இல்லாத சிலர் பாலித்தீன் பை உள்ளிட்டவற்றிலும் பிடித்து சென்றதை காண முடிந்தது. அங்கு பொதுமக்கள் திரண்டதால பரபரப்பு ஏற்பட்டது.
இது பற்றிய தகவல் அறிந்து திருநாவலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து பொதுமக்களை விரட்டி அடித்தனர். இதனால் எண்ணெயை பிடிப்பதற்காக பாத்திரங்களுடன் வந்த சிலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

போக்குவரத்து பாதிப்பு

எண்ணெய் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருநாவலூர் தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டனர்.
 பின்னர் நெடுஞ்சாலைதுறை ஊழியர்கள் உதவியோடு சாலையில் கவிழ்ந்து கிடந்த கண்டெய்னர் லாரி அப்புறப்படுத்தப்பட்டது. விபத்து குறித்து திருநாவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story