சமூக இடைவெளியை கடைபிடிக்காத டீ கடை உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்
சமூக இடைவெளியை கடைபிடிக்காத டீ கடை உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் கலெக்டர் கிரண்குராலா நடவடிக்கை
சின்னசேலம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நோய்த்தொற்று அறிகுறிகள் உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்காக தற்காலிக சிறப்பு மையங்களை முன்னெச்சரிக்கையாக தயார்படுத்த கலெக்டர் கிரண் குராலா நடவடிக்கை எடுத்து வருகிறார்.
அந்தவ வகையில் நேற்று சின்னசேலத்தில் இருந்து நைனார்பாளையம் செல்லும் சாலையில் உள்ள தனியார் மகளிர் பொறியியல் கல்லூரி மற்றும் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை பவர் ஆபீஸ் அருகில் உள்ள தனியார் பள்ளி ஆகியவற்றில் தற்காலிக மையங்கள் அமைப்பதற்காக கலெக்டர் கிரண்குராலா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனையடுத்து சின்னசேலம் பஸ் நிலையம் மற்றும் அம்சாகுளம் பகுதியில் உள்ள கடைகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என ஆய்வுசெய்தார்.
அம்சாகுளம் பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள டீ கடையில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பொதுமக்கள் நெருக்கமாக கூடியிருந்ததை பார்த்த கலெக்டர் கிரண்குராலா கடை உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். தொடர்ந்து அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தங்கியுள்ள கொரோனா நோயாளிகளை நேரில் பார்வையிட்டு அங்கு வழங்கப்படும் உணவு முறைகளைப் பற்றி அவர்களிடம் கேட்டறிந்தார். அப்போது சின்ன சேலம் தாசில்தார் விஜய பிரபாகரன், வருவாய் ஆய்வாளர் சிங்காரவேல், பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகுமார், கிராம நிர்வாக அலுவலர்கள் கண்ணதாசன், காந்திமதி உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story