மாவட்ட வாக்கு எண்ணும் மையத்திற்குள் கொரோனா பரிசோதனை சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே அனுமதி
மாவட்ட வாக்கு எண்ணும் மையத்திற்குள் கொரோனா பரிசோதனை சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என கலெக்டர் கூறினார்.
கரூர்
கூட்டம்
கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று கரூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் மற்றும் கொரோனா தொற்று பரவாமல் இருக்க கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள் குறித்து வேட்பாளர்கள் மற்றும் முகவர்களிடையே விளக்கும் வகையிலான கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பிரசாந்த் மு.வடநேரே தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
வாக்கு எண்ணும் மையத்தில் சட்டமன்ற தொகுதி வாரியாக போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வாக்கு எண்ணும் அறைகளில் டேபிள்கள் போடப்பட்டு, முகவர்கள் அமர்வதற்கான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி
இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளையும், கொரோனா தொற்று பரவாமல் இருக்க அறிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகளையும் பின்பற்றி அமைதியான முறையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம். வாக்கு எண்ணும் மையத்திற்கு வருகை தரும் வேட்பாளர்கள், முகவர்கள், வாக்கு எண்ணும் இடமுகவர்கள் ஆகியோர் கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் எடுத்திருக்க வேண்டும் அல்லது கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என்று ரிசல்ட் வந்திருக்க வேண்டும். அவ்வாறு உள்ளவர்கள் அதற்கான சான்றிதழை சமர்ப்பித்தால் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப் படுவார்கள்.
சிறப்பு பரிசோதனை
வேட்பாளர்கள் மற்றும் முகவர்களின் வசதிக்கேற்ப சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் 29-ந்தேதி (வியாழக்கிழமை) மற்றும் 30-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் காலை 10 மணி முதல் சிறப்பு பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. அதன் அடிப்படையில் அரவக்குறிச்சி தொகுதிக்கு அரவக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகம், க.பரமத்தி மற்றும் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும், கரூர் சட்டமன்ற தொகுதிக்கு கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், கரூர் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் கொரோனா தொற்றுக்கான பரிசோதனை சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.
தனிபட்டியல்
அதேபோல, கிருஷ்ணராயபுரம் (தனி) சட்டமன்ற தொகுதிக்கு கடவூர் மற்றும் கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் அலுவலகங்களிலும், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு குளித்தலை சார் ஆட்சியர் அலுவலகம், அண்ணா சமுதாய மன்றம் மற்றும் தோகைமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகிய இடங்களில் வேட்பாளர்கள், முகவர்கள், வாக்கு எண்ணும் இடமுகவர்கள் ஆகியோருக்கு கொரோனா தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. பரிசோதனை மேற்கொள்வதற்காக முகவர்கள், வாக்கு எண்ணும் இடமுகவர்கள் ஆகியோர் பட்டியலை வழங்கும் போது 20 சதவீத நபர்களை கூடுதலாக தனி பட்டியலாக வழங்குங்கள்.
கண்டிப்பாக முக கவசம்
இவர்களுக்கும் சேர்த்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். ஏனென்றால், கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்படும் நபர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். அத்தகைய சூழலில் கூடுதலாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நெகட்டிவ் ரிசல்ட் வந்த நபர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். வாக்கு எண்ணும் மையத்திற்குள் வரும் நபர்கள் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும்.
வேட்பாளருடன் 2 பேர்
போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை நிறுத்தக்கூடாது. வெற்றிபெறும் வேட்பாளர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வெற்றிக்கான சான்றிதழை வழங்கும்போது வேட்பாளருடன் 2 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு வெற்றி கொண்டாட்டங்கள் ஏதும் நடத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதை அரசியல் கட்சிகள் முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.
கரூர் மாவட்டத்தின் வாக்கு எண்ணிக்கையினை பாதுகாப்பான சூழலில், அமைதியான முறையில் நடத்தி முடிக்க அனைவரது முழு ஒத்துழைப்பினையும் அளிக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தார்.
கலந்து கொண்டவர்கள்
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஷாஜகான், வட்டாட்சியர் (தேர்தல் பிரிவு) பிரபு, மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பாலசுப்பிரமணியன் (கரூர்), ஷேக்அப்துல்ரக்மான் (குளித்தலை), தவச்செல்வம் (அரவக்குறிச்சி), தட்சிணாமூர்த்தி (கிருஷ்ணராயபுரம்) உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story