கொரோனா தடுப்பூசி செலுத்தினால் உயிரிழப்புகளை தடுக்க முடியும்


கொரோனா தடுப்பூசி செலுத்தினால் உயிரிழப்புகளை தடுக்க முடியும்
x
தினத்தந்தி 28 April 2021 11:52 PM IST (Updated: 29 April 2021 12:03 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பூசி செலுத்தினால் உயிரிழப்புகளை தடுக்க முடியும் என்று கூடலூரில் நடந்த விழிப்புணர்வு முகாமில் ஆர்.டி.ஓ. ராஜ்குமார் பேசினார்.

கூடலூர்,

கொரோனா தடுப்பு வழிமுறைகள் மற்றும் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு முகாம், கூடலூர் அருகே உள்ள ஸ்ரீமதுரை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு ஆர்.டி.ஓ. ராஜ்குமார் தலைமை தாங்கி பேசியபோது கூறியதாவது:-

கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து உள்ளது. இதன் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆனால் பெரும்பாலான மக்கள் தடுப்பூசி போடாமல் உள்ளனர். இலவசமாக போடப்படும் தடுப்பூசியை செலுத்திக்கொண்டால் உயிரிழப்புகளை தடுக்கலாம்.

மேலும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். திருமண நிகழ்ச்சிகளில் 50 பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும். 

இதற்கு அந்தந்த ஆர்.டி.ஓ.விடம் உரிய அனுமதி பெற வேண்டும். ஆட்டோக்களில் 2 பேர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும். இதை பெரும்பாலான டிரைவர்கள் பின்பற்றுவது இல்லை. எனவே அனைவரும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 
இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அரசு டாக்டர் லோகேஷ் பேசும்போது, அவசியமின்றி யாரும் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம். கை, கால்களை சோப் போட்டு கழுவ வேண்டும். வீட்டில் இருந்தாலும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். தடுப்பூசி போட்டாலும் மீண்டும் கொரோனா ஏற்படுகிறது என்ற தகவல் வருகிறது. அது உண்மைதான். 

ஆனால் அதன் மூலம் உயிரிழப்புகளை தவிர்க்கலாம் என்றார். இதில் தாசில்தார் தினேஷ், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஜெய்சங்கர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நம்பிராஜ், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிதுரை மற்றும் வியாபாரிகள், டிரைவர்கள் கலந்துகொண்டனர். முடிவில் அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

Next Story