திருச்சி கருமண்டபத்தில் துணிகரம்: வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகள் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


திருச்சி கருமண்டபத்தில் துணிகரம்: வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகள் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 29 April 2021 12:23 AM IST (Updated: 29 April 2021 12:23 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி கருமண்டபத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

திருச்சி, 
திருச்சி கருமண்டபத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சிங்கப்பூரில் வேலை

திருச்சி கருமண்டபம் நியூசெல்வநகரை சேர்ந்தவர் கஜேந்திரன். இவர் சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சசிகலா (வயது 32). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு தனது சொந்த ஊரான அரியலூருக்கு சென்று இருந்தார். 

பின்னர் அங்கிருந்து நேற்று மதியம் வீடு திரும்பினார். அப்போது அவருடைய வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சசிகலா வீட்டிற்குள் சென்று பார்த்தார். 

20 பவுன் நகைகள் திருட்டு

அங்கு, பொருட்கள் சிதறிக்கிடந்ததுடன், பீரோவும் உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் அதில் இருந்த 20 பவுன் நகைகள் திருட்டு போயிருந்தன. உடனே இதுபற்றி செசன்ஸ் கோர்ட்டு போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

தொடர் சம்பவம்

நேற்று முன்தினம் இதே பகுதியில் பூட்டி இருந்த ஒரு வீட்டில் 40 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. ஆகையால் அதே நபர்கள் தான் சசிகலா வீட்டிலும் கைவரிசை காட்டி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
திருச்சியில் பூட்டிக்கிடக்கும் வீடுகளில் அடிக்கடி நடக்கும் கொள்ளை சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தொடர் கொள்ளையை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

Next Story