3 ஆயிரம் சதுர அடிக்கு மேற்பட்ட கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடல்
குமரியில் 3 ஆயிரம் சதுர அடிக்கு மேற்பட்ட கடைகள் வர்த்தக நிறுவனங்களை மூடி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
நாகர்கோவில்:
குமரியில் 3 ஆயிரம் சதுர அடிக்கு மேற்பட்ட கடைகள் வர்த்தக நிறுவனங்களை மூடி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
கட்டுப்பாடுகள்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையொட்டி தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
அதன் ஒரு கட்டமாக தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஓட்டல்கள் டீக்கடைகளில் அமர்ந்து சாப்பிட, தேனீர் அருந்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பெரிய கடைகள் அடைப்பு
இந்த நிலையில் 3 ஆயிரம் சதுர அடிக்கு மேற்பட்ட கடைகள் வர்த்தக நிறுவனங்கள் அனைத்தையும் மூட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி குமரி மாவட்டத்தில் நேற்று காலை முதல் இதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டனர். நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் ஆணையர் ஆஷாஅஜித் உத்தரவின்பேரில், நகர் நல அதிகாரி கின்சால் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் ஊழியர்கள் இதற்கான நடவடிக்கைகளை எடுத்தனர்.
குறிப்பாக நாகர்கோவில் கே.பி.ரோடு. கேப் ரோடு, கோர்ட் ரோடு, பொதுப்பணித்துறை அலுவலக சாலை, வடசேரி, அவ்வை சண்முகம் சாலை, மீனாட்சிபுரம், கிருஷ்ணன்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 3 ஆயிரம் சதுர அடிக்கு மேற்பட்ட கடைகள் வணிக நிறுவனங்களை அடைக்குமாறு அந்தந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள், நிர்வாகிகளிடம் மாநகராட்சி அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட கடைகள், வணிக நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கடைகளை மூடினர். சில பெரிய கடைகள் வணிக நிறுவனங்களை சேர்ந்தவர்கள் தாமாகவே முன்வந்து கடைகளை அடைத்து இருந்தனர்.
மாவட்டம் முழுவதும்
இவ்வாறு நேற்று மாநகராட்சி பகுதியில் சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள், நகைகடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் போன்ற பெரிய கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன.
இதேபோல் தக்கலை, குளச்சல், மார்த்தாண்டம், கருங்கள், களியக்காவிளை, குலசேகரம், கன்னியாகுமரி உள்ளிட்ட குமரி மாவட்டம் முழுவதும் 3 ஆயிரம் சதுர அடிக்கு மேற்பட்ட கடைகள் வணிக நிறுவனங்கள் அனைத்தையும் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் மூட நடவடிக்கை எடுத்தனர்.
Related Tags :
Next Story