நெல்லை ரெயில் நிலையத்தில் வெளிமாநில பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை


நெல்லை ரெயில் நிலையத்தில் வெளிமாநில பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 29 April 2021 12:58 AM IST (Updated: 29 April 2021 12:58 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை ரெயில் நிலையத்துக்கு வெளிமாநிலங்களில் இருந்து வந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

நெல்லை, ஏப்:
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வெளி மாநிலங்களில் இருந்து வந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ரெயில் பயணிகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதுதவிர ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஊரடங்கின் போது பொது போக்குவரத்து உள்ளிட்ட போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படுகிறது.
இருந்த போதிலும் ரெயில் போக்குவரத்தில் ஏற்கனவே குறைவான ரெயில்களே இயக்கப்பட்டு வருவதால், அந்த ரெயில்களுக்கு தடை விதிக்காமல் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது.

வெளிமாநில பயணிகள்

இந்த நிலையில் கொரோனா பரவலின் வேகம் அதிகரித்து இருப்பதால் வெளி மாநில பயணிகள் தமிழகத்துக்குள் நுழைவதற்கு இ-பாஸ் எனப்படும் அரசின் அனுமதி சீட்டு அவசியம் ஆகிறது. 
ஆனால் ரெயில் பயணிகள் இ-பாஸ் இன்றி எளிதாக தமிழ்நாட்டுக்குள் வந்துவிடுகிறார்கள். குறிப்பாக ரெயில்கள் மூலம் வருகிற வெளி மாநில பயணிகள் தமிழகத்துக்குள் எளிதாக வந்து செல்கிறார்கள்.
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு மும்பை, ஹபா, திருவனந்தபுரம், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள நகரங்களில் இருந்து ரெயில்கள் இயக்கப்படுகிறது. இவர்கள் மூலம் கொரோனா பரவல் அதிகமாகும் என்பதால் அவர்களுக்கு பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டது.

பரிசோதனை

அதன்படி நேற்று முதல் மருத்துவ குழுவினர் பரிசோதனையை தொடங்கினார்கள். நெல்லை மாநகராட்சி சந்திப்பு சுகாதார ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் மருத்துவ குழுவினர் நேற்று நெல்லை சந்திப்பு ரெயில் நிலைய நுழைவு வாசல் பகுதியில் தடுப்பு அரண்களை அமைத்தனர்.
அப்போது ஹபா, திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில்களில் வெளி மாநிலங்களில் இருந்து வந்த பயணிகளை தடுத்து நிறுத்தி சமூக இடைவெளியுடன் நிற்க வைத்தனர். பின்னர் அவர்களுக்கு உடல் வெப்ப நிலை, காய்ச்சல், தொடர் இருமல், உடலில் ஆச்சிஜன் அழுத்தம் ஆகியவற்றை பரிசோதனை செய்தனர்.

இதில் விருப்பப்பட்ட பயணிகளுக்கு அங்கேயே கொரோனா பரிசோதனைக்கு தேவையான சளி மாதிரியும் சேகரிக்கப்பட்டது. அந்த பயணிகளின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டது. சளி மாதிரியை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து, சம்பந்தப்பட்ட பயணிகளுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டால், அவர்களது முகவரிக்கு சுகாதார குழுவினர் சென்று அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்வார்கள். இந்த பரிசோதனை தொடர்ந்து நடைபெறும் என்று மருத்துவ குழுவினர் தெரிவித்து உள்ளனர்.

Next Story