மாவட்ட தேர்தல் அதிகாரி நேரில் ஆய்வு
வாக்கு எண்ணிக்கை மையத்தில் முன்னேற்பாடு பணி குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான கண்ணன் ஆய்வு செய்தார்.
விருதுநகர்,
வாக்கு எண்ணிக்கை மையத்தில் முன்னேற்பாடு பணி குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான கண்ணன் ஆய்வு செய்தார்.
வாக்கு எண்ணிக்கை மையம்
மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை, திருச்சுழி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர் சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 6-ந் தேதி வாக்குப்பதிவு நடந்த நிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் விருதுநகர்-சிவகாசி ரோட்டில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையமான ஸ்ரீவித்யா கல்லூரி வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.
முன்னேற்பாடுகள்
இந்நிலையில் வருகிற 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் இம்மையத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான கண்ணன் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஒவ்வொரு தொகுதிக்கும் 14 மேஜைகள் போட மாநில தேர்தல் அதிகாரி அனுமதி அளித்துள்ளார். எனவே ஒவ்வொரு தொகுதிகளுக்கும் 2 அறைகளில் 14 மேஜைகள் போடப்பட்டு உள்ளது. காலை8-30மணிக்கு வாக்குஎண்ணிக்கை தொடங்கும்.
25 சுற்றுக்கள்
முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். வாக்கு எண்ணிக்கைக்கு வரும் வேட்பாளர்களின் முகவர்கள் கொரோனா தொற்றுபரிசோதனை சான்று பெற்றிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ராஜபாளையம் தொகுதியில் 25 சுற்றுக்களும், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சாத்தூர் தொகுதியில் தலா 26 சுற்றுக்களும், சிவகாசி தொகுதியில் 27 சுற்றுக்களும், விருதுநகர் தொகுதியில் 24 சுற்றுக்களும், அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழியில் தலா 23 சுற்றுக்களும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
அறிவிப்பு பலகை
வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் கண்ணன் தபால் வாக்கு எண்ணிக்கை அறையில் கூடுதல் மேஜைகள் போடுமாறு அறிவுறுத்தினார்.
மேலும் அறிவிப்பு பலகைகள் அதிகமாக வைப்பதற்கும் ஏற்பாடு செய்யும்படி கேட்டுக்கொண்டார். மேலும் 7 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கைக்கு போடப்பட்டுள்ள மேஜைகள் மற்றும் மேடை, ஒளிப்பதிவு ஏற்பாடு அறிவிப்புகளுக்கான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்தார்.
வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குஎண்ணிக்கைக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அதிகாரி மங்கள ராமசுப்பிரமணியன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story