கொடைக்கானலில் சேகரிக்கப்பட்ட 22 டன் பிளாஸ்டிக் கழிவுகள்
கொடைக்கானலில் சேகரிக்கப்பட்ட 22 டன் பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சிக்காக அரியலூர் சிமெண்டு ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பயன்படுத்துவது தெரியவந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனாலும் அதனை மீறி பலரும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பால் பாக்கெட், உணவு பாக்கெட்டுகள் ஆகியவை முக்கியமானவையாக உள்ளது. இவ்வாறு வீடுகளிலும், கடைகளிலும் உபயோகப்படுத்தப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் வாரத்தில் ஒருமுறை சேகரித்து, அதை பிரகாசபுரம் பகுதியில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கிற்கு அனுப்பி வருகின்றனர். அங்கு அவை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் நகரில் சேகரிக்கப்பட்ட சுமார் 22 டன் பிளாஸ்டிக் கழிவுகள் நேற்று மறுசுழற்சிக்காக அரியலூரில் உள்ள சிமெண்டு ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நகராட்சி ஆணையாளர் நாராயணன் அறிவுரையின்பேரில் சுகாதார ஆய்வாளர்கள் சுப்பையா, பாண்டிசெல்வம் ஆகியோர் தலைமையில் துப்புரவு பணியாளர்கள் பிளாஸ்டிக் கழிவுகளை, சிமெண்டு ஆலையில் இருந்து வரவழைக்கப்பட்ட லாரிகளில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story