உண்ணாவிரதம் இருக்க முயன்ற 39 பேர் கைது


உண்ணாவிரதம் இருக்க முயன்ற 39 பேர் கைது
x
தினத்தந்தி 29 April 2021 1:09 AM IST (Updated: 29 April 2021 1:09 AM IST)
t-max-icont-min-icon

உண்ணாவிரதம் இருக்க முயன்ற 39 பேர் கைது செய்யப்பட்டனர்

ஆண்டிமடம்
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் தாலுகா ஸ்ரீராமன் ஊராட்சிக்கு உட்பட்ட ரெட்டிப்பாளையம் கிராமத்தில் மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு அருகே உள்ள காலி இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து வீடு கட்டி வருவதாகவும் அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ரெட்டிப்பாளையம் கிராம பொதுமக்கள் ஆண்டிமடம் தாலுகா அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர். ஆனால் அந்த மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் கடந்த மாதம் 3-ந் தேதி தாலுகா அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் தாசில்தார் முத்துகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தி இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்தநிலையில் ஊர் பொதுமக்கள் சிலர் மீது ஆக்கிரமிப்பு செய்த நபர் ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.  அந்த பொய் புகாரை திரும்ப பெறக்கோரியும் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டிவரும் நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், கோவில் இடத்தை மீட்கக்கோரியும் இந்து முன்னணி மாநில செயற்குழு உறுப்பினர் பாலமுருகன் தலைமையில் ரெட்டிப்பாளையம் கிராம பொதுமக்கள் உண்ணாவிரதம் இருக்க முயன்றனர். இதுகுறித்து தகவலறிந்த ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ் தலைமையில் ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் அனுமதி இல்லாமல் உண்ணாவிரதம் இருக்க முயன்ற இந்து முன்னணியினர் மற்றும் ரெட்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த 15 பெண்கள் உள்பட மொத்தம் 39 பேர் மீது வழக்குப்பதிந்து அவர்களை கைது செய்து ஆண்டி மடத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
-

Next Story