வேட்பாளரின் முகவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்- கலெக்டர் விஷ்ணு அறிவுறுத்தல்
வாக்கு எண்ணிக்கையை பார்வையிட வரும் முகவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் விஷ்ணு கூறியுள்ளார்.
நெல்லை, ஏப்:
வாக்கு எண்ணும் பணியை பார்வையிட வரும் முகவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும், அல்லது கொரோனா பரிசோதனை சான்று அவசியம் என்று நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு கூறினார்.
ஆலோசனை கூட்டம்
நெல்லை மாவட்டத்தில் உள்ள நெல்லை, பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம் மற்றும் அம்பை ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வருகிற 2-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) எண்ணப்படுகிறது. இதற்குரிய ஏற்பாடுகளை நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமையில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் வாக்கு எண்ணும் மையத்துக்கு வருகிற முகவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த ஆலோசனை கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
முகவர்களுக்கு கட்டுப்பாடு
ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்கள், அவர்களின் வாக்கு எண்ணிக்கை முகவர்களின் பட்டியலை, அவர்களது புகைப்படங்களுடன் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் படிவம் -18ல் அளிக்க வேண்டும். இந்த பட்டியல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தினத்துக்கு 3 நாட்களுக்கு முன்பாக ஒப்படைக்க வேண்டும். அந்த முகவர்கள் ஒவ்வொருக்கும் அடையாள அட்டைகளை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தயார் செய்து வேட்பாளர்களிடம் அளிப்பார்கள். வேட்பாளர்களின் முகவர்கள் 2-ந்தேதி காலை 6.30 மணி முதல் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
வாக்கு எண்ணும் முகவர்கள் அடையாள அட்டையுடன் வரவேண்டும். இல்லை என்றால் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
வாக்குப்பதிவு எந்திரம் வைக்கப்பட்டு உள்ள பாதுகாப்பு அறை 2-ந்தேதி காலை 7.30 மணி முதல் 8.30 மணிக்குள் தேர்தல் பார்வையாளர், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில் திறக்கப்படும்.
செல்போன் அனுமதி இல்லை
வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதி இல்லை. முகவர் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள மேஜை அருகில் மட்டும் அமர்ந்திருக்க வேண்டும். கூடத்தின் அனைத்து பகுதியிலும் நடமாட அனுமதிக்கப்பட மாட்டார்கள். எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது முகவர்களோ அல்லது மற்றவர்களோ எண்ணுகை கூடத்தை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். குடிநீர், சிற்றுண்டி, கழிவறை போன்றவற்றுக்கான அனைத்து வசதிகளும் வாக்கு எண்ணுகை கூடம் அருகில் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.
வாக்குப்பதிவு சுற்றுகளின் விவரம், எண்ணிக்கை அட்டவணை வாரியாக வேட்பாளர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலரால் தெரிவிக்கப்படும்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி போட்டியிடும் அனைத்து வேட்பாளர்கள், தேர்தல் முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்துக்குள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும்.
தடுப்பூசி-பரிசோதனை
வேட்பாளர்கள் மற்றும் வாக்கு எண்ணும் முகவர்கள் வாக்கு எண்ணும் தினத்துக்கு 72 மணி நேரத்துக்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும். இல்லை என்றால் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை காண்பிக்க வேண்டும். வெற்றி பெறும் வேட்பாளர் சான்றிதழை பெறுவதற்கு வேட்பாளருடன் 2 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.
கொண்டாட்டம் கூடாது
தேர்ந்து எடுக்கப்படும் வேட்பாளர், வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபடுவது இந்திய தேர்தல் ஆணையத்தால் தடை செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், கலெக்டரின் நேர் முக உதவியாளர் (பொது) கணேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் (ஒழுங்கு நடவடிக்கை ஆணையர் சுகன்யா, பயிற்சி உதவி கலெக்டர்கள் அலமேல் மங்கை, மகாலட்சுமி மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story