மாயமான கன்னியாகுமரி மீனவர்கள் 11 பேர் பத்திரமாக மீட்பு
அரபிக்கடலில் மீன்பிடித்து கொண்டு இருந்த போது மாயமான கன்னியாகுமரி மீனவர்கள் 11 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர்.
மங்களூரு: அரபிக்கடலில் மீன்பிடித்து கொண்டு இருந்த போது மாயமான கன்னியாகுமரி மீனவர்கள் 11 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர்.
கன்னியாகுமரி மீனவர்கள்
தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஜோசப் பிராங்கிள், ஏசுதாசன், ஜான், சுரேஷ், சேபுவா, ஜெனிஸ்டன், ஜெகன், ஜெபரீக், மெல்வின் உள்பட 11 மீனவர்கள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அரபிக்கடலில் மீன்பிடிக்க மெர்சிடஸ் என்ற மீன்பிடி படகில் சென்று இருந்தனர். இந்த நிலையில் திடீரென இவர்களை தொடர்பு கொள்ள இருந்த இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் 11 பேரின் நிலை என்ன என்பது தெரியாமல் இருந்தது.
இதற்கிடையே அரபிக்கடலில் மீன்பிடித்து விட்டு கன்னியாகுமரிக்கு திரும்பி இருந்த சக மீனவர்கள் மெர்சிடஸ் படகின் உடைந்த பாகங்கள் அரபிக்கடலில் மிதந்து கொண்டு இருப்பதாகவும், இதனால் அந்த படகு கடலில் மூழ்கி இருக்கலாம் என்றும் கன்னியாகுமரி மீன்வளத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதனால் 11 மீனவர்களும் மாயமானது தெரிந்தது. அவர்கள் கடலில் மூழ்கி இறந்து இருக்கலாம் என்று அஞ்சப்பட்டது. இதுகுறித்து கன்னியாகுமரி மீன்வளத்துறை அதிகாரிகள், கடலோர காவல் படையினருக்கு தகவல் கொடுத்தனர்.
கோவாவில் மீட்பு
அதன்பேரில் 11 மீனவர்களையும் தேடும் பணி நடந்தது. இந்த பணியில் ஹெலிகாப்டர்கள், விமானங்கள், கடலோர காவல் படைக்கு சொந்தமான கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டன. இந்த நிலையில் மாயமான 11 மீனவர்களும் நேற்று கோவா மாநிலத்தில் இருந்து 1,100 கடல் மைல் தூரத்தில் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதுகுறித்து இந்திய கடலோர காவல்படை அதிகாரி வெங்கடேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறியதாவது:-
மாயமான கன்னியாகுமரி மீனவர்கள் 11 பேரையும் பத்திரமாக மீட்டு கரை சேர்த்து உள்ளோம். இந்திய கடலோர காவல்படையினர் தங்களது உயிரை பணயம் வைத்து ஏராளமான மீனவர்கள் உயிரை காப்பாற்றி உள்ளனர். மாயமான மீனவர்களை 3 குழுக்கள் தேடி கண்டுபடித்து உள்ளது. மீட்கப்பட்ட மீனவர்கள் 11 பேரும் விரைவில் கன்னியாகுமரிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றார்.
Related Tags :
Next Story