கார்-லாரி மோதி விபத்து; வணிக வரித்துறை அதிகாரி-மகன் உள்பட 4 பேர் சாவு
பல்லாரி அருகே கார், லாரி மோதிக் கொண்ட விபத்தில் வணிக வரித்துறை அதிகாரி- மகன் உள்பட 4 பேர் பலியானார்கள். ஊரடங்கால் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றவர்களுக்கு இந்த பரிதாபம் நடந்துள்ளது.
பல்லாரி: பல்லாரி அருகே கார், லாரி மோதிக் கொண்ட விபத்தில் வணிக வரித்துறை அதிகாரி- மகன் உள்பட 4 பேர் பலியானார்கள். ஊரடங்கால் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றவர்களுக்கு இந்த பரிதாபம் நடந்துள்ளது.
தந்தை-மகன் சாவு
பல்லாரி மாவட்டம் தெக்கலகோட்டே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அப்போது அதே சாலையில் ஒரு லாரி வந்தது. இந்த நிலையில், எதிர்பாராத விதமாக லாரியும், காரும் மோதிக் கொண்டன. லாரி மோதிய வேகத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது.
இந்த கோர விபத்தில் காரில் இருந்த தந்தை, மகன் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பாிதாபமாக உயிர் இழந்தார்கள். தகவல் அறிந்ததும் தெக்கலகோட்டே போலீசார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்கள். அவர்கள் பலியான 4 பேரின் உடல்களையும் காருக்குள் இருந்து வெளியே மீட்டனர். அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மருத்துவ கல்லூரி மாணவர்
போலீஸ் விசாரணையில், விபத்தில் பலியானவர்கள் கலபுரகி மாவட்டம் சிஞ்சோலி தாலுகாவில் உள்ள கொரவண்டபள்ளி கிராமத்தை சேர்ந்த பீமராவ் பெல்லூரு (வயது 52). அவரது மகன் பசவராஜ் பெல்லூரு. இவர்களது உறவினர் சுனில் (30), கார் டிரைவர் ரேவண்ண சித்தப்பா (32) என்று தெரிந்தது.
இவர்களில் பீமராவ் பெல்லூரு பெங்களூருவில் வணிக வரித்துறையில் உயர் அதிகாரியாக பணியாற்றி வந்தார். அவரது மகன் பசவராஜ் பெல்லூரு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ் இறுதி ஆண்டு படித்து வந்தார். பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் சுனில் வேலை செய்தார்.
இவர்கள் 4 பேரும் கொரோனா காரணமாக நேற்று மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமலுக்கு வந்ததால், நேற்று முன்தினம் இரவே பெங்களூருவில் இருந்து தங்களது சொந்த ஊரான சிஞ்சோலிக்கு காரில் புறப்பட்டு சென்றிருந்தனர். அவ்வாறு செல்லும் வழியில் லாரி மோதி 4 பேரும் பலியாக நேரிட்டது தெரியவந்துள்ளது.
லாரி மற்றும் கார் டிரைவர்களின் கவனக்குறைவே விபத்திற்கு காரணம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தெக்கலகோட்டே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story