சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகத்தை கடை உரிமையாளர்கள் முற்றுகை
சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகத்தை கடை உரிமையாளர்கள் முற்றுகையிட்டார்கள்.
சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகத்தை கடை உரிமையாளர்கள் முற்றுகையிட்டார்கள்.
நகராட்சி அலுவலகம் முற்றுகை
பவானிசாகர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல்.சுந்தரம் தலைமையில் சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று ஏராளமான கடை உரிமையாளர்கள் ஒன்று திரண்டனர். பின்னர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
இதுபற்றி அறிந்ததும் நகராட்சி ஆணையாளர் அமுதா அங்கு வந்து கடை உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கடை உரிமையாளர்கள் கூறும்போது, ‘சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் பகுதியில் நாங்கள் பேக்கரிகள் மற்றும் டீக்கடைகள் வைத்து நடத்தி வருகிறோம்.
சீல் வைப்பு
இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நகராட்சி அதிகாரிகள் எங்கள் கடைகளுக்குள் வந்து கொேரானா தடுப்பு விதிமுறைகளை மீறியதாக கூறி 5 பேக்கரிகள் மற்றும் டீக்கடைகளுக்கு சீல் வைத்துவிட்டார்கள். இதனால் கடையில் இருந்த கேக் வகைகள், பன்வகைகள், தேங்காய் பன் உள்பட பல்வேறு தின்பண்டங்கள் கெட்டு போயிருக்கும். இதனால் பல ஆயிரம் ரூபாய் நாங்கள் நஷ்டம் அடைந்து விட்டோம். எனவே எங்களுக்கு நியாயம் வழங்க வேண்டும். கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
அதற்கு அதிகாரி கூறும்போது, ‘உடனே சீல் அகற்றப்பட்டு கடைகள் திறந்து விடப்படும். மேலும் இதுதொடர்பாக சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ரவிசங்கர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெறும்’ என்றார். அதை ஏற்றுக்கொண்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.
தாலுகா அலுவலகத்தில் கூட்டம்
இந்த நிலையில் சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ரவிசங்கர் தலைமையில் பல்வேறு வியாபாரிகள் சங்க கூட்டம் நடைபெற்றது. இதில் நகராட்சி ஆணையாளர் அமுதா, சுகாதார அலுவலர் சக்திவேல் மற்றும் அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர், அனைத்து வணிகர் சங்கத்தினர், நகைக்கடை உரிமையாளர்கள் சங்கத்தினர், சிகை அழகு நிலையம், ஆடு-கோழி வியாபாரிகள் சங்கத்தினர், ஜவுளி வியாபாரிகள் சங்கத்தினர் கலந்து கொண்டார்கள்.
கூட்டத்தில் அதிகாரிகள் சங்க நிர்வாகிகளிடம், அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு விதிமுறைகளை பற்றியும், அதை செயல்படுத்த நீங்கள் ஒத்துழைப்பு கொடுக்காவிட்டால் உங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
நஷ்டம்
உடனே சங்க நிர்வாகிகள் கூறும்போது, ‘கொரோனா தடுப்பு விதிமுறைகள் பற்றி எதுவும் கூறாமல் திடீரென பேக்கரி மற்றும் டீக்கடைகளை சீல் வைத்தது எங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. சிகை அழகு நிலையத்தை மூடினால் எப்படி குடும்பம் நடத்துவது’ என்றனர்.
அதற்கு அதிகாரிகள், ‘இது தொடர்பாக பரிசீலனை செய்யப்படும்’ என்றனர். பின்னர் நிர்வாகிகள் கூறும்போது, ‘சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டன், சிக்கன் கடைகளை மூட கூறுகிறீர்கள். ஆனால் சிலர் மறைமுகமாக வியாபாரம் செய்கிறார்கள்’ என்றனர். அவ்வாறு வியாபாரம் செய்வது தெரிந்தால் எங்களுக்கு உடனே தகவல் கூறுங்கள். நாங்கள் நேரில் வந்து கடைக்கு சீல் வைத்து விடுகிறோம் என்று அதிகாரிகள் தெரிவித்தார்கள்.
Related Tags :
Next Story