போதிய பயணிகள் இல்லாததால் சென்னையில் 50 விமானங்கள் ரத்து
போதிய பயணிகள் இல்லாததால் சென்னையில் இருந்து சென்று வரவேண்டிய 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
கடுமையான கட்டுப்பாடுகள்
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இரவுநேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்து உள்ளது.இதேபோல் விமான பயணிகளுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. சென்னை உள்நாட்டு விமான பயணிகளுக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை சான்றிதழ், வெளி மாநில பயணிகளுக்கு கட்டாய இ-பாஸ் முறை போன்றவைகளும் அமல்படுத்தப்பட்டு உள்ளன.
கடுமையான கட்டுப்பாடுகள், சென்னை மற்றும் புறநகரில் வேகமாக பரவும் கொரோனா பீதியால் சென்னைக்கு வரும் விமான பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது.
50 விமானங்கள் ரத்துஇதனால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் வருகை பயணிகள் 3,500 ஆகவும், புறப்பாடு பயணிகள் 6,500 ஆகவும் என 10 ஆயிரமாக உள்ளது.போதிய பயணிகள் இல்லாததால் சென்னை விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு 2 விமானங்கள், டெல்லிக்கு 3, ஐதராபாத்துக்கு 5, கோவைக்கு 3, பெங்களூருக்கு 3 விமானங்களும், அதேபோல் மதுரை, கொல்கத்தா, சிலிகுரி, ஆமதாபாத், கொச்சி, இந்தூா், அந்தமான், கோவா உள்பட 25 புறப்பாடு விமானங்களும், அதேபோல் அந்த நகரங்களில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய 25 வருகை விமானங்களும் என மொத்தம் 50 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
அவைகளும் போதிய பயணிகள் இல்லாமல் காலியாகவே சென்று வந்தன. மைசூருக்கு 6 பயணிகளும், கொச்சி விமானத்தில் 7 பயணிகளும், திருச்சிக்கு 8 பயணிகளும் பயணம் செய்தனர்.