தீவட்டிப்பட்டி அருகே மோட்டார்சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதியது: தனியார் நிறுவன விற்பனை மேலாளர் பலி


தீவட்டிப்பட்டி அருகே மோட்டார்சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதியது: தனியார் நிறுவன விற்பனை மேலாளர் பலி
x
தினத்தந்தி 29 April 2021 5:03 AM IST (Updated: 29 April 2021 5:03 AM IST)
t-max-icont-min-icon

தீவட்டிப்பட்டி அருகே, மோட்டார்சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் தனியார் நிறுவன விற்பனை மேலாளர் இறந்தார்.

ஓமலூர்:
தீவட்டிப்பட்டி அருகே, மோட்டார்சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் தனியார் நிறுவன விற்பனை மேலாளர் இறந்தார்.
 விற்பனை மேலாளர்
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த காடையாம்பட்டி நாச்சினம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 38). இவர் சூரமங்கலம் பகுதியில் உள்ள ஒரு பொக்லைன் எந்திர கம்பெனியில் விற்பனை மேலாளராக பணியாற்றி வந்தார்.
நேற்று காலை கணேசன் வேலைக்கு செல்ல தனது மோட்டார் சைக்கிளில் நாச்சினம்பட்டியில் இருந்து சூரமங்கலம் நோக்கி சென்றார். பூசாரிபட்டி இந்திராநகர் அருகே சென்றபோது சேலத்திலிருந்து தீவட்டிப்பட்டி நோக்கி வந்த டிப்பர் லாரி எதிர்திசையில் சேலம் ரோட்டில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் டீசல் பிடிக்க திரும்பி உள்ளது.
பலி
அப்போது எதிர்பாராதவிதமாக டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் லாரியின் சக்கரம் ஏறி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே கணேசன் பரிதாபமாக இறந்தார். அவர் அணிந்திருந்த ஹெல்மெட் அப்பளம் போல் நொறுங்கியது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் தீவட்டிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டிப்பர் லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அதில், அந்த டிப்பர் லாரி பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவருக்கு சொந்தமானது என்பதும், அதை பொம்மிடியை சேர்ந்த முருகன் ஓட்டி வந்ததும் தெரியவந்தது. உம்பிளிக்கம்பட்டியில் உள்ள ஒரு ஜல்லிக்கிரஷரில் ஜல்லி ஏற்றிச்செல்ல வந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது. இதுபற்றி தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story