மராட்டியத்தில் மருந்து தட்டுப்பாட்டால் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி பணி மே 1-ந் தேதி தொடங்காது
மராட்டியத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரிகளில் இலவசமாக தடுப்பூசி போட மந்திரி சபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மராட்டிய சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே நிருபர்களிடம் கூறியதாவது:-
மராட்டியத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரிகளில் இலவசமாக தடுப்பூசி போட மந்திரி சபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அனைவரின் எதிர்பார்ப்பும் இந்த வயது பிரிவினருக்கு வருகிற 1-ந் தேதி முதல் தடுப்பூசி போடப்படுமா என்பது தான். ஆனால் அதற்கு இல்லை என்பது தான் பதில். காரணம் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே 18 வயது முதல் 44 வயதுடையவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தேதியில் தடுப்பூசி போடும் பணி தொடங்காது.
சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்திடம் பேசியபோதிலும் மே 20-ந் தேதி வரை தடுப்பூசி கிடைக்காது என்று கூறிவிட்டனர். எனவே 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து மே 3-வது வாரம் வரை காத்திருக்க உள்ளோம். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போடுவதற்கு கோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்வது கட்டாயம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே குறிப்பிட்ட நேரத்தில் மாநில அரசு ஆர்டர் செய்யாததால் தான் மராட்டியத்தில் தடுப்பூசி மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதாக பா.ஜனதா குற்றம்சாட்டி உள்ளது.