டெலிபோன் ஒட்டுக்கேட்பு வழக்கில் சம்மன்; ஐ.பி.எஸ். பெண் அதிகாரி ராஷ்மி சுக்லா மும்பை போலீசில் ஆஜராகவில்லை


டெலிபோன்  ஒட்டுக்கேட்பு வழக்கில் சம்மன்; ஐ.பி.எஸ். பெண் அதிகாரி ராஷ்மி சுக்லா மும்பை போலீசில் ஆஜராகவில்லை
x
தினத்தந்தி 29 April 2021 6:20 AM IST (Updated: 29 April 2021 6:20 AM IST)
t-max-icont-min-icon

டெலிபோன் உரையாடல் ஒட்டுக்கேட்பு வழக்கில் ஐ.பி.எஸ். அதிகாரி ராஷ்மி சுக்லா மும்பை போலீஸ் முன் நேரில் ஆஜராகவில்லை.

வழக்குப்பதிவு

மராட்டிய சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் சமீபத்தில் போலீஸ் இடமாற்றத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம் சாட்டினார். மேலும் இதற்கு சாட்சியாக மும்பையில் புலனாய்வுப் பிரிவில் கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த ராஷ்மி சுக்லா, அப்போதைய டி.ஜி.பி.க்கு அனுப்பிய அறக்கையை மேற்கொள் காட்டினார். அந்த அறிக்கையில் போலீஸ் இடமாற்ற ஊழல் தொடர்பாக புலனாய்வு பிரிவு சார்பில் டெலிபோன் ஒட்டுக்கேட்கப்பட்ட தகவல்கள் இருந்தன.

இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மராட்டிய அரசுக்கு எதிராக அதிகாரிகளை வைத்து பா.ஜனதா விளையாடுவதாக குற்றம்சாட்டிய சிவசேனா அரசு, ராஷ்மி சுக்லா அனுமதியின்றி டெலிபோன் ஒட்டுக்கேட்டதாக குற்றம்சாட்டியது.

இதையடுத்து ஐ.பி.எஸ். அதிகாரி ராஷ்மி சுக்லா அனுமதி இன்றி போன் அழைப்புகளை ஒட்டுக்கேட்டதாக பி.கே.சி. சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலி நம்பிக்கைக்குரிய அறிக்கையை கசிய விட்டது தொடர்பாக ரகசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்தனர்.

சம்மன்

இந்த நிலையில் விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு தற்போது ஐதராபாத்தில் சி.ஆர்.பி.எப். சிறப்பு டி.ஜி.பி.யாக உள்ள ராஷ்மி சுக்லாவுக்கு மும்பை சைபர் குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். அதில் நேற்று காலை 11 மணிக்கு பி.கே.சி.யில் உள்ள அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் இதற்கு ராஷ்மி சுக்லா இ-மெயில் மூலம் அளித்த பதிலில், “தற்போது நிலவிவரும் கொரோனா பாதிப்பு சூழ்நிலையால் தன்னால் நேரில் ஆஜராக முடிவில்லை” என கூறினார். மேலும் விசாரணையில் தாமதத்தை தவிர்க்க தன்னிடம் கேட்கவேண்டிய கேள்விகளை அனுப்பி வைக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

இருப்பினும் அவரது பதில் திருப்தி அளிக்காததால் மீண்டும் அவருக்கு சம்மன் அனுப்ப வாய்ப்புள்ளதாக போலீஸ் அதிகாரிகள் கூறினர்.


Next Story