மாநகராட்சி அனுமதி பெற தேவையில்லை; சென்னையில் தனியார் ஓட்டல்களை கொரோனா பராமரிப்பு மையமாக மாற்றலாம்; சென்னை மாநகராட்சி கமிஷனர் தகவல்
சென்னையில் தனியார் ஓட்டல்களை கொரோனா பராமரிப்பு மையமாக மாற்றலாம் எனவும், அதற்கு மாநகராட்சி அனுமதி பெற தேவையில்லை என்றும் மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
தீவிரமடைந்த கொரோனா
கொரோனா 2-வது அலை தீவிரமடைந்துள்ள நிலையில், ஆஸ்பத்திரிகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது நிலவிவரும் இக்கட்டான சூழலில் படுக்கை வசதிகளை அதிகரிக்கும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் ஆஸ்பத்திரிகளும் தங்களிடம் உள்ள மொத்த படுக்கைகளில் குறைந்தபட்சம் 50 சதவீத படுக்கைகளை கொரோனா சிகிச்சைக்காக ஒதுக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.அதேபோல அவசரமில்லாத சாதாரண சிகிச்சைகளுக்கு உள்நோயாளிகளை அனுமதிப்பதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும், கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைக்காக மத்திய அரசு வெளியிட்டுள்ள நடைமுறைகளை அனைத்து ஆஸ்பத்திரிகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் அரசு தெரிவித்திருந்தது.
பராமரிப்பு மையம்
ஆஸ்பத்திரி நிர்வாகங்கள், கொரோனா சிகிச்சை தொடர்பான விவரங்களை மாவட்ட இணை சுகாதாரத்துறை இயக்குனரகத்திலோ அல்லது சென்னையில் உள்ள பொது சுகாதாரத்துறை இயக்குனரகத்திலோ தினசரி தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.இந்த நிலையில் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உச்சத்தை தொட்டு வருவதால், தனியார் ஓட்டல்கள், ஆஸ்பத்திரிகளில் கொரோனா பராமரிப்பு மையங்களை தனிப்பட்ட முறையில் தொடங்கலாம் என பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.
இதற்காக சென்னை மாநகராட்சியிடம் அனுமதி பெற தேவையில்லை என்றும், பராமரிப்பு மையங்கள் தொடங்கப்போவது குறித்த தகவல்களை மட்டும் சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரியின் jagadeesan.gcc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவித்தால் போதுமானது என்றும் மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story