கடந்த கால தேர்தல்களை விட வாக்கு எண்ணும் சுற்றுகள் அதிகரிப்பு முடிவு தெரிய தாமதமாகும்


கடந்த கால தேர்தல்களை விட வாக்கு எண்ணும் சுற்றுகள் அதிகரிப்பு முடிவு தெரிய தாமதமாகும்
x
தினத்தந்தி 29 April 2021 10:35 AM GMT (Updated: 29 April 2021 10:35 AM GMT)

கடந்த கால தேர்தல்களை விட இந்த முறை வாக்கு எண்ணும் சுற்றுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளதால், முடிவு தெரிய தாமதம் ஆகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.


தேனி:
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. தேனி மாவட்டத்தை பொறுத்தவரை ஆண்டிப்பட்டி, பெரியகுளம் (தனி), போடி, கம்பம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் மொத்தம் 74 பேர் போட்டியிட்டனர். மாவட்டத்தில் மொத்தம் 1,561 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடந்தது.
பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் தேனி அருகே கொடுவிலார்பட்டியில் தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டது. இங்கு வாக்கு எண்ணும் பணிக்கான முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு உள்ளன. வாக்கு எண்ணும் அறைகளில் தடுப்பு கம்புகள், வலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு தொகுதிக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு 14 மேஜைகள் அமைக்கப்பட்டு உள்ளன. தபால் வாக்குகளை எண்ணுவதற்கு 3 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சுற்றுகள் அதிகரிப்பு
இந்த முறை தேர்தலின் போது கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கூடுதல் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டன. கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன. வாக்குப்பதிவு எந்திரங்கள் எண்ணிக்கை மற்றும் வாக்கு எண்ணும் மேஜைகள் எண்ணிக்கைக்கு ஏற்ப சுற்றுகள் எண்ணிக்கை அமையும். அந்த வகையில் கடந்த கால தேர்தல்களை காட்டிலும் தேனி மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் இந்த முறை கூடுதல் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டன. இதனால், வாக்கு எண்ணும் சுற்றுகள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
தொகுதி வாரியாக ஆண்டிப்பட்டியில் 388, பெரியகுளத்தில் 398, போடியில் 383, கம்பத்தில் 392 வாக்குப்பதிவு மையங்களில் தேர்தல் நடந்தது. 14 மேஜைகள் வீதம் வாக்கு எண்ணிக்கை நடப்பதால், அதிகபட்சமாக பெரியகுளம் தொகுதியில் 29 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. மற்ற 3 தொகுதிகளிலும் 28 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகின்றன.
முடிவு தாமதமாகும்
சுற்றுகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் வெற்றி, தோல்வி முடிவு தெரிவதும் தாமதம் ஆகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. வழக்கமாக பிற்பகலில் வெற்றி, தோல்வி விவரம் தெரிந்து விடும். ஆனால், இந்த முறை வாக்கு எண்ணிக்கை முடிவதற்கு 12 முதல் 14 மணி நேரம் வரை ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால், தேர்தல் முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க நள்ளிரவு வரை ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகவலை தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.Next Story