வேலூரில் தடையை மீறி இயங்கிய பிரபல ஜவுளி கடைக்கு ரூ.1 லட்சம் அபராதம்
வேலூரில் தடையை மீறி இயங்கிய பிரபல ஜவுளி கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து வசூல் செய்தனர்.
வேலூர்
தடையை மீறி இயங்கிய ஜவுளிக்கடை
வேலூர் மாநகராட்சி பகுதியில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தொற்றை கட்டுக்குள் கொண்டு வர தடுப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசின் உத்தரவின்பேரில் மாநகராட்சி பகுதியில் 3 ஆயிரம் சதுரஅடி மற்றும் அதற்கு மேற்பட்ட அளவுடைய கடைகள் மூடப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் ஒரேநாளில் 3 ஆயிரம் சதுர அடிக்கு அதிகமான 23 கடைகள் மூடப்பட்டன. கடையின் அளவில் சந்தேகம் இருந்தால் மாநகராட்சி ஊழியர்கள் அளவீடு செய்தனர்.
இந்த நிலையில் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே சென்னை-பெங்களூரு அணுகுசாலையில் உள்ள பிரபல ஜவுளிக்கடை தடையை மீறி இயங்குவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. அதையடுத்து வேலூர் மாநகராட்சி கமிஷனர் சங்கரன், 2-வது மண்டல கொரோனா கண்காணிப்பு அலுவலர் செந்தில்குமார், சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் ஊழியர்கள் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
ரூ.1 லட்சம் அபராதம்
ஜவுளிக்கடையின் முன்பக்க ஷட்டர் மூடப்பட்டிருந்தது. கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை அடித்தளத்தில் இருந்து லிப்ட் மூலம் மேல்மாடிக்கு அழைத்து செல்லப்பட்டு, விற்பனை நடைபெற்றது. கடையில் 35 ஊழியர்கள் பணிபுரிந்தனர். அதையடுத்து கமிஷனர் சங்கரன் அந்த கடைக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கும்படி உத்தரவிட்டார். அதையடுத்து உடனடியாக அந்த கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டு, வசூல் செய்யப்பட்டது. இனிமேல் தடையை மீறி கடையை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.
இதேபோன்று தடையை மீறி இயங்கிய வேலூர் கிரீன் சர்க்கிளில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் வழியில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. வேலூர் கிரீன் சர்க்கிளில் உள்ள இருசக்கர வாகனங்கள் ஷோரூமை பூட்டி மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் அந்த ஷோரூமிற்கு ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story