ஆரணி அருகே வங்கி பெண் ஊழியரிடம் கத்தியை காட்டி நகை பறிப்பு


ஆரணி அருகே வங்கி பெண் ஊழியரிடம் கத்தியை காட்டி நகை பறிப்பு
x
தினத்தந்தி 29 April 2021 5:59 PM IST (Updated: 29 April 2021 5:59 PM IST)
t-max-icont-min-icon

ஆரணி அருகே ஸ்கூட்டரில் சென்ற வங்கி பெண் ஊழியரிடம் கத்தியை காட்டி நகைகளை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆரணி

வங்கி ஊழியர்

ஆரணியை அடுத்த அக்ராபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருடைய மனைவி காயத்ரி (வயது 23). இருவரும் தனியார் வங்கியில் வேலை செய்து வருகின்றனர். சதீஷ்குமார் குடியாத்தம் கிளையிலும், காயத்ரி ஆரணி கிளையிலும் வேலை செய்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் நேற்று முன்தினம் காயத்ரி ஸ்கூட்டரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். ஆரணி - வேலூர் நெடுஞ்சாலையில் மில் அருகில் இருந்து அக்ராபாளையம் செல்லும் சாலையில் செல்லும் போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் காயத்ரியை மறித்தனர். 

நகை பறிப்பு

பின்னர் அவர்கள் கத்தியை காட்டி காயத்ரி கழுத்தில் அணிந்திருந்த 1¼ பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்றுவிட்டனர். 
இதுகுறித்து காயத்ரி, ஆரணி தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர் வழிப்பறி

இதே பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணிடம் 4½ பவுன் நகை பறிப்பு  சம்பவம் நடந்துள்ளது. மேலும் இதேபோல் கடந்த சில தினங்களாக ஆரணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வழிப்பறி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

வாக்கு எண்ணிக்கை 2-ந் தேதி நடைபெற உள்ளதால்,  மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள தச்சூர் பகுதியில் பாதுகாப்பு பணியில் அதிகளவில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் போலீஸ் நிலையங்களில் போலீசார் இல்லாததால் மர்ம நபர்கள் தங்களது கைவரிசையை காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story