வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்த கம்ப்யூட்டர்கள்
திண்டுக்கல் அருகேயுள்ள அண்ணா பல்கலைக்கழக என்ஜினீயரிங் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்துக்கு கம்ப்யூட்டர்கள் உள்ளிட்ட உபகரணங்கள் கொண்டு வரப்பட்டது.
திண்டுக்கல் :
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை, ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள அண்ணா பல்கலைக்கழக என்ஜினீயரிங் கல்லூரியில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
குறிப்பாக வாக்கு எண்ணிக்கையின்போது பயன்படுத்தப்படுகிற உபகரணங்கள் கொண்டு வரப்படுகிறது.
அதன்படி கம்ப்யூட்டர், மானிட்டர், ஜெராக்ஸ் எந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்களை நத்தம், திண்டுக்கல் கிழக்கு, மேற்கு தாலுகா அலுவலக தேர்தல் அதிகாரிகள் நேற்று கொண்டு வந்தனர்.
இதற்கிடையே நத்தத்தில் இருந்து தனியார் கார் மூலம் கம்ப்யூட்டர்கள் மற்றும் உபகரணங்கள் வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு வந்தனர்.
ஆனால் அந்த காரை போலீசார் வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கவில்லை.
இதனால் வாக்கு எண்ணும் மையத்துக்கு வெளியே காரை நிறுத்தி அதில் இருந்த கம்ப்யூட்டர் மற்றும் உபகரணங்களை ஊழியர்கள் உள்ளே எடுத்து சென்றனர்.
இதற்கிடையே திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளி பிரியா வாக்கு எண்ணும் மையத்தில் நேற்று மதியம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சியை பார்வையிட்டார்.
வாக்கு எண்ணும் மையத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story