போலீசாருக்கு மூலிகை தேனீர் வினியோகம்
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் போலீஸ்காரர்களுக்கு மூலிகை தேனீர் வினியோகம் செய்யப்படுகிறது.
திண்டுக்கல் :
திண்டுக்கல் மாவட்ட போலீஸ் துறை சார்பில், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் போலீஸ்காரர்களுக்கு மூலிகை தேனீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இதற்கான தொடக்க விழா தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்தில் நேற்று நடந்தது.
விழாவுக்கு போலீஸ் சூப்பிரண்டு ரவளி பிரியா தலைமை தாங்கினார். திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போலீஸ்காரர்களுக்கு தேனீர் வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசும்போது, பொதுமக்கள் மத்தியில் பணியாற்றி வருகிற போலீஸ்காரர்கள், கொரோனா தொற்றுக்கு ஆளாகும் சூழல் உள்ளது.
அதில் இருந்து காத்து கொள்ளும் வகையில் போலீசாருக்கு மூலிகை தேனீர் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தினமும் காலை, மாலையில் போலீஸ்காரர்கள் மூலிகை தேனீரை அருந்த வேண்டும். இரவு ரோந்து பணி இல்லாத நேரத்தில், குறைந்த பட்சம் 8 மணி நேரம் போலீசார் உறங்க முயற்சி செய்ய வேண்டும்.
அவ்வாறு உறங்கினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இயற்கையாகவே, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் மஞ்சளை உணவில் அதிகமாக சேர்த்து கொள்ளுங்கள் என்றார்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக திண்டுக்கல் புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு சுகுமார் வரவேற்றார்.
முடிவில் திண்டுக்கல் தாலுகா இன்ஸ்பெக்டர் பார்த்திபன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story