ஆலங்குடி அருகே கருவேலமரக்காட்டுக்குள் கிடந்த குழந்தை பிணம்; போலீசார் விசாரணை
ஆலங்குடி அருகே கருவேலமரக்காட்டுக்குள் கிடந்த குழந்தை பிணம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்குடி,
ஆலங்குடி அருகே கரும்பிரான்கோட்டையில் கருவேலமரக்காடுகள் உள்ளன. இங்கு நேற்று பிறந்து சில நாட்களே ஆன ஒரு குழந்தையின் உடலை நாய்கள் கடித்து குதறி கொண்டிருந்தது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்ற விவசாய தொழிலாளர்கள் ஆலங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் அந்த குழந்தையின் உடலை மீட்டுபிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், கருவேலமரக்காட்டுக்குள் ஆழமாக குழித்தோண்டாமல் மேற்பரப்பில் புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை நாய்கள் தோண்டி எடுத்து கடித்து குதறியுள்ளது. மேலும் குழந்தை புதைக்கப்பட்ட பகுதி சுடுகாடு கிடையாது. எதற்காக இங்கு வந்து குழந்தையை புதைத்தார்கள் என்ற விவரம் தெரியவில்லை. நாய்கள் கடித்து குதறியதால் அந்த குழந்தை ஆணா? பெண்ணா என்ற விவரம் தெரியவில்லை.
நோயால் பாதிக்கப்பட்டு இறந்ததால் இங்கு புதைத்தார்களா? அல்லது தவறான உறவு முறையால் பிறந்ததால் குழந்தையை இங்கு புதைத்தார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் யாருக்காவது சமீபத்தில் குழந்தை பிறந்ததா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story