மின்னணு எந்திரங்களை பாதுகாப்பாக வைக்க அமைக்கப்படும் அறைகளை கலெக்டர் ஆய்வு
விழுப்புரம் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் மின்னணு எந்திரங்களை பாதுகாப்பாக வைக்க அமைக்கப்படும் அறைகளை கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த 6-ந் தேதி நடந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) முடிந்ததும் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தையும் 45 நாட்கள் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் அந்தந்த தொகுதி வாக்கு எண்ணும் மையங்களில் இருந்து விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு வரப்பட உள்ளது.
கலெக்டர் பார்வையிட்டார்
இந்த வாக்கு எந்திரங்களை 7 சட்டமன்ற தொகுதிகள் வாரியாக பிரித்து தனித்தனியாக பாதுகாப்பான முறையில் வைப்பதற்காக இந்திய தேர்தல் ஆணைய சேமிப்பு கிடங்கில் 7 அறைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த அறைகளை நேற்று காலை மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான அண்ணாதுரை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது 7 அறைகளையும் தயார் செய்யும் பணியை விரைந்து முடிக்குமாறு தேர்தல் அதிகாரிகளுக்கும், பொதுப்பணித்துறையினருக்கும் அவர் அறிவுறுத்தினார். அப்போது தேர்தல் தனி தாசில்தார் சீனிவாசன் மற்றும் பொதுப்பணித்துறையினர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story